
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆவேசமாக தனது உரையை ஆரம்பித்த விஜய், “நமது கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று கூறி அரங்கை அதிரவிட்டார். தொடர்ந்து பேசிய அவர், பாசிச பாஜக உடன் நேரடி கூட்டணியோ அல்லது மறைமுகக் கூட்டணியோ அமைக்க நாம் என்ன உலக மகா ஊழல் கட்சியா? மத்தியில் நீங்கள் ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா? இல்லை இஸ்லாமியர்களுக்கு கெடுதல் செய்யவா?
நீட் தேர்வால் நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜி அவர்களே? மக்கள் சக்தியே இல்லாத ஊழல் கட்சிகளை மிரட்டி அடிபணியவைத்து, 2029 வரை சொகுசு பயணம் போகலாம்னு நினைக்கிறீங்களா ஜீ? என்ன தான் நேரடி, மறைமுக கூட்டம் வைத்தாலும், தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது, தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க? என்று கேள்வி எழுப்பினார்.
அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்று தான். விஜய் பல லட்சம் பேர் கூடும் கூட்டத்தால் மட்டும் தான் இருக்கிறார் என்று தப்பு கணக்கு போடாதீர்கள். இந்த கூட்டம் வெறும் ஓட்டாக மட்டும் இல்லாமல் வரப்போகும் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சிக்கு நாம் வைக்கப்போகும் வேட்டா, நம்மை கோட்டைக்கு அனுப்பப்போகும் ரூட்டா இருக்கப்போகிறது. 2026 தேர்தலில் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையில் மட்டும்தான் போட்டி.
தமிழர்கள் பாஜகவினரை வெற்றி பெறச்செய்யாததால் தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யாமல் பாஜக ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்கிறது. பாஜக திமுக இடையே கள்ள உறவை வைத்துக் கொண்டு எதிர்ப்பது போல் எதிர்த்து மறைமுகமாக உறவாடுகிறது. எதிர்கட்சியாக இருக்கும் போது கெட்அவுட் மோடி என்பது, ஆட்சியில் இருந்தால் வெல்கம் மோடி என்று கூறி குடை பிடிப்பது தான் திமுக.வின் செயல் என்று கூறினார்.