
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் நடைபெற்று வருகிறது. விஜய் மாநாட்டில் என்ன பேசப்போகிறார் என்று எதிர்நோக்கி லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர். அப்போது தொண்டர்களின் கோஷம் விண்ணை அதிரவிட்ட நிலையில் விஜய்யின் உரை தொடங்கியது. தொடக்கத்திலேயே மாஸ் காட்டிய விஜய் குட்டி கதையுடன் தனது உரையைத் தொடங்கினார்.
அப்போது, “காட்டில் வாழக்கூடிய சிங்கம் அடிக்கடி குகையை விட்டு வெளியேறாது. வேட்டையாடுவதற்காக மட்டும் தான் வெளியே வரும். அப்படியே வெளியே வந்தாலும் உயிரிழந்த விலங்குகளை தொட்டு கூட பார்க்காது. தன்னை விட பலம் வாய்ந்த, அளவில் பெரிய அளவில் உள்ள விலங்குகளை தான் வேட்டையாடும்” என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், வீரம் விளையும் மதுரை மண்ணை வணங்குகிறேன். இந்த மண்ணில் வாழும் மக்களும் உணர்வுப்பூர்வமாணவர்கள். நான் இந்த மண்ணில் கால் வைத்த போது எனக்கு மனதில் தோன்றியது ஒரே ஒரு விஷயம் அதுவும் உங்களுக்கு தெரியும். நமக்கு ரொம்ப ரொம்ப தெரிந்தது புரட்சிதலைவர் எம்ஜிஆர் தான். ஆனால், அவருடன் பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவரை மாதிரியே குணம் கொண்ட என்னுடைய அண்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடன் பழகுவதற்கு நிறையவே வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண் தானே அவரை மறக்க முடியுமா? என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக திட்டக்குடியில் பேசிய பிரேமலதா விஜயகாந்தை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டால் அவரது புகைப்படத்தை விஜய் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார். இப்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் விஜயகாந்தை தனது அண்ணனாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி மதுரைக்கு சொந்தக்காரரான விஜயகாந்தின் மண்ணில் தான் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார். அதாவது மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் என்று எல்லா தொகுதியிலும் தான் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.