
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் மிகபிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக உரையாற்றினார். தனது உரையின் போது திமுக, பாஜக, அதிமுக என எந்த கட்சியையும் பாகுபாடு இல்லாமல் அடுத்தடுத்து போட்டு தள்ளினார்.
குறிப்பாக பாஜக, ஆர்எஸ்எஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை விஜய் விமர்சித்தபோது தொண்டர்களிடம் இருந்து வந்த சத்தம் விண்ணை தொட்டது. வரக்கூடிய சட்டமன்ற தேர்தல் தமிழக வெற்றி கழகத்திற்கும், திமுக.வுக்கும் இடையே தான் போட்டி. தமிழக வெற்றி கழகம் சுயநலத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி கிடையாது. மக்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்டது.
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்து ஜெயித்து விடலாம் என போட்டு வைத்துள்ள சிலரின் கணக்குகள் எடுபடாது. பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி. எங்களுக்கும், திமுகவுக்கும் மட்டும் தான் இந்த போட்டி.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்யவா அல்லது இஸ்லாமிய மக்களுக்கு சதி செய்யவா? அடிமை கூட்டணியில் நான் ஒருபோதும் சேரமாட்டேன். பாஜகவின் எண்ணம் ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது என்று கூறி தெறிக்கவிட்டார்.
தொடர்ந்து பேசுகையில், நான் இப்போது அரசியலுக்கு வர நன்றிக்கடன் தான் காரணம். 30 ஆண்டுகளா என்னை தாங்கி பிடிச்சு, அன்பையும், ஆதரவையும் கொடுத்துட்டு வர்றீங்க. நீங்க எனக்கு கடவுள் கொடுத்த வரம். என் கூட நிற்குற மக்களை, நான் எப்படி மறப்பேன்? இதை பார்க்கும்போது எதிரிகளுக்கு எரியுது.
இதனைத் தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தலின் தவெக வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதாகக் கூறி விஜய் பகீர் கிளப்பினார். இதனால் உணர்ச்சியில் பொங்கிய ரசிகர்கள் மத்தியில் மதுரை கிழக்கு தொகுதி வேட்பாளர் விஜய் என்றதும் கரகோஷம் விண்ணை அதிரவிட்டது. கரகோஷம் அடங்குவதற்குள்ளாக மதுரை தெற்கு தொகுதி விஜய், திருப்பரங்குன்றம் விஜய், மேலூர் விஜய், சோழவந்தான் விஜய். தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் நமது வேட்பாளர்களாக நான் தான் போட்டியிடுவதாக அர்த்தம் என்று கூறினார்.