வேலுார் நகைக் கடை கொள்ளையர்களை பிடிக்க, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திற்கு தனிப்படையினர் விரைந்துள்ளனர்.
வேலுார், காட்பாடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை உள்ளது. நேற்று முன்தினம் கொள்ளையர்கள் சுவற்றில் துளையிட்டு நகை, வைரம் கொள்ளையடித்து சென்றனர். கடை மேலாளர் பிரதீஷ் அளித்த புகார்படி, வேலுார் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க எட்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:நகைக் கடை ஊழியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 30 கிலோ தங்க நகைகள் கொள்ளை போனதாக முதலில் கூறினர்.
undefined
ஆனால், கடையில் வைத்துள்ள பில்களின்படி கொள்ளையடிக்கப்பட்டது, 15.8 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் என மதிப்பீடு செய்யப்பட்டு, அதன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடை லாக்கரை திறக்க முடியாததால் அதில் இருந்த 70 கிலோ தங்கம், வைர நகைகள் தப்பின. நகைக் கடை சுவர்கள், 'ரேக்கு' கள், இரும்பு தடுப்புகளில் உள்ள தடயங்களில் சேகரிக்கப்பட்ட கைவிரல் ரேகைகள் மற்றும் கடை அருகே கிடந்த 'விக்' ஆகியவற்றை ஆய்வு செய்ததில், வடநாட்டு கும்பல் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.
கொள்ளையர்களை பிடிக்க, வேலுார் முழுதும் வாகன சோசனை நடத்தப்பட்டு வருகிறது. தங்கும் விடுதிகளில் சோதனை நடக்கிறது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர், பெங்களூரை சேர்ந்த பழைய குற்றவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால், தனிப்படையினர் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.கொள்ளையர்கள் ரயில் மூலம் தப்பியிருக்கலாம் என்பதால், காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றனர்.
வடக்கு மண்டல ஐ.ஜி., சந்தோஷ்குமார், நேற்று நகைக் கடையை பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது, நகைக் கடைக்குள் உள்ள கேமராவில் பதிவாகியிருந்த காட்சியில், கொள்ளையன் ஒருவன் முகமூடி அணிந்து தலையில் விக் வைத்து, கையில் ஸ்பிரேயர் வைத்துக் கொண்டு வரும் காட்சி பதிவாகியிருந்தது.
சில ஆண்டுகளுக்கு முன், திருச்சியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா, வட மாநிலங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகிறோம்’ என்று கூறினார்.பின் நகைக் கடை கேமராவில் பதிவான கொள்ளையன் படத்தை போலீசார் வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.