
சென்னை வேளச்சேரியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரை மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அரிவாளால் வெட்டி கொடூரமாகத் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளச்சேரி லட்சுமி நகரை சேர்ந்த 23 வயதான பார்த்திபன் என்ற அந்த ஊழியர் நடந்து சென்றபோது பைக்கில் வந்த 2 பேர் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் வலி தாங்க முடியாமல் பார்த்திபன் அலறினார். இதைப் பார்த்த பொதுமக்கள் கற்கள், கட்டைகளை கொண்டு டெலிவரி ஊழியரை வெட்டிய 2 பேரையும் விரட்டியடித்தனர். அவர்கள் இரண்டு பேரும் மதுபோதையில் இந்த கொடூர செயலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த பார்த்திபன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிக மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்த கொடூர சம்பவம் சென்னை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
அமைதிப் பூங்காவான தமிழகத்தை அச்சம் நிறைந்த பூமியாக்கியது தான் திமுக அரசின் சாதனை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போதை கும்பல் வெறியாட்டம்
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''சென்னை வேளச்சேரியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரை மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அரிவாளால் வெட்டிக் கொடூரமாகத் தாக்கும் காணொளி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் அரசு அலுவலகங்கள், காவல்நிலையங்கள், நீதிமன்றங்கள், குடியிருப்புப் பகுதிகள், மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகள் என எங்கு திரும்பினாலும் கடும் போதையில் கொடும் ஆயுதங்களால் ஒருவரை ஓடஓட விரட்டி வெட்டுவதும், குத்திக் கொலை செய்வதும், காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.
எப்பொழுது யாருக்கு என்ன நடக்குமோ?
குற்றவாளிகளுக்கு போதையும் திமிரும் துணிச்சலும் தலைக்கேறி, ஆளும் அரசின் மீது முற்றிலுமாக பயம் விட்டுப்போய்விட்டது. திமுக அரசின் காட்டாட்சியில் எப்பொழுது யாருக்கு என்ன நடக்குமோ என்ற பதற்றத்திலேயே மக்கள் தங்கள் நாட்களைக் கழிக்க வேண்டியிருக்கிறது. மக்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுமளவிற்குத் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது என்றாலே, ஆளும் அரசு அரியணையில் நீடிக்கத் தகுதியில்லை என்பது தான் பொருள்.
மக்கள் விரோத ஆட்சி
ஆனால், "குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்” என சூளுரைத்த முதல்வர் ஸ்டாலின் தனது இரும்புக்கரம் மொத்தமாகத் துருப்பிடித்து இத்துப்போய்விட்டது என்பதை அறியாமல் “நாடு போற்றும் நல்லாட்சி” என்ற கனவுலகில் மிதந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் இனி தொடரலாமா?'' என்று தெரிவித்துள்ளார்.