
செந்துறை,
அரியலூரில் இருக்கும் தனியார் சிமெண்டு ஆலையில் பணியின்போது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்ககோரி ஆலையை முற்றுகையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆலத்தியூரில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில், கடலூர் மாவட்டம் ஆவினன்குடியைச் சேர்ந்த கரிகாலன் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
ஆலை வளாகத்தில் பணியில் இருந்தபோது சிமெண்டு மூட்டை ஏற்றிய லாரி மோதியதில், கரிகாலன் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், கரிகாலன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி வெள்ளிக்கிழமை அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அந்த சிமெண்டு ஆலையை முற்றுகையிட்டு, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செந்துறை துணை தாசில்தார் தேன்மொழி மற்றும் தளவாய் காவல் இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது, அவர்களுடைய கோரிக்கை தொடர்பாக நாளை (இன்று) பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதாக உறுதி அளித்ததின் பேரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர்.
இந்த போராட்டத்தால் சிமெண்டு ஆலையில் இருந்து வெளியிலும், வெளியில் இருந்து உள்ளேயும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.