வாடும் பயிரைக் கண்டபோதெல்லாம வாடும் விவசாயிகள்…

 
Published : Nov 06, 2016, 12:32 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
வாடும் பயிரைக் கண்டபோதெல்லாம வாடும் விவசாயிகள்…

சுருக்கம்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை பகுதியில் அணை மற்றும் கண்மாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் வாடும் பயிர்களை கண்டு வாடும் விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு பயணிக்கின்றனர்.

விவசாயமே இந்தியாவின் முதுகெலும்பு என்று ஆண்டாண்டு காலமாக பேச்சளவில் மட்டுமே சொல்லப்பட்டு வருகிறது. உலகளாவிய அளவில் விவசாயிகளின் எண்ணிக்கையில் சராசரியாக இரண்டரை ஏக்கர் நிலம் வைத்திருப்போர் 85 சதவீதத்தினர். இவர்கள் தான் 95 சதவீத மக்களுக்கு உணவு உற்பத்தி செய்து தருகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

ஆனால் நாட்டின் முதுகெலும்பான அந்த தொழிலை கைவிட்டு விவசாயிகள், தொழிலாளிகளாக மாறி வரும் நிலை வெம்பக்கோட்டை பகுதியில் ஏற்பட்டுள்ளது.

கிராமங்களை கொண்ட இந்த பகுதியில் விவசாயமே பிரதான தொழில். வெம்பக்கோட்டை அணை மற்றும் தவிர ஆங்காங்கே கண்மாய்கள் ஏராளமாக உள்ளன. இதன் மூலம் இருபோகம் நெல் விளைவித்ததோடு வாழை போன்றவை பயிரிட்டும் இலாபம் ஈட்டி வந்தனர். ஆனால் இந்த நிலை இப்போது “அதெல்லாம் ஒரு காலம்” என்று சொல்லும் நிலைக்கு வந்துள்ளது.

விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கு ஆதாரமாக திகழும் வெம்பக்கோட்டை அணை எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது கட்டப்பட்டதாகும். இந்த அணையினை 2 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கும் பணி தற்போது பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்டது.

கரையை பலப்படுத்துதல், மதகுகளை சரிபார்த்தல் போன்ற பணிகளை செய்து முடித்து விட்டனர்.

ஆனால் நமது பகுதிக்கே உரித்தான சாபக்கேடு என்று சொல்லப்படும் சீமை கருவேல மரங்களை அகற்ற எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை. அணைக்கு தண்ணீர் வரும் பகுதியெல்லாம் கருவேல மரங்களே மண்டிக் கிடக்கின்றன. இது விவசாயிகளை வேதனைப்படுத்துகிறது.

இந்த அணை கட்டி முடிக்கப்பட்ட பின்னர் 5 முறை மறுகால் போய் உள்ளது. கடந்த ஆண்டு அணை நிரம்பி மறுகால் போனது. ஆனாலும் அதனால் விவசாயிகளுக்கு பயனில்லை.

அணை தண்ணீரை கண்மாய்களுக்கு திருப்பி விட முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இடது மற்றும் வலது கால்வாய் பகுதியில் திறந்துவிட்டிருந்தால் 14 கிலோ மீட்டர் தொலைவுக்குள்ள பகுதி பாசன வசதி பெற்று இருக்கும். இந்த அணை தண்ணீர் செவல்பட்டி கண்மாய்க்கு செல்லும் காலங்களில் 2 போகம் நெல் விளையும். ஏராளமானோர் வாழையும் பயிரிட்டு பலன் பெறுவர்.

ஆனால் அணை தண்ணீர் திறக்கப்படாமல் ஆற்றில் திருப்பி விட்டனர். இந்த அணை தண்ணீர் கடந்த ஆண்டு இருக்கன்குடி கண்மாய் பகுதிக்கு வீணாக சென்ற நிலையில் ஏற்கனவே அந்த கண்மாய் நிரைந்திருந்ததால் தண்ணீர் வைப்பாற்றில் விடப்பட்டு கடலில் கலந்து விரயமானது. நெல், வாழை என பயிரிடப்பட்ட பகுதியெல்லாம் இப்போது தரிசாக கிடக்கிறது.

இந்த பகுதியில் உள்ள நிறைபாண்டியன் கண்மாய் நிரம்பினால் விஜயகரிசல்குளம் பகுதியில் இருபோக சாகுபடி செய்திட இயலும் ஆனால் இந்த கண்மாய் பராமரிக்கப்படாமல் மதகுகள் உடைந்து கிடக்கின்றன. இதனால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கோட்டை கண்மாயின் மூலம் மேல கோதைநாச்சியார்புரம், கீழ கோதைநாச்சியார்புரம், மீனாட்சிபுரம், துரைச்சாமிபுரம், சேதுராமலிங்கபுரம், பூசாலிநாயக்கன்பட்டி, தாயில்பட்டி ஆகிய கிராமத்தினர் பயன் பெற்றனர். 300–க்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வந்த நிலையில் இப்போது 90 பேர் தான் விவசாயம் செய்கின்றனர்.

வல்லம்பட்டி கண்மாய் மூலமாக பனையடிப்பட்டி, புள்ள கவுண்டன்பட்டி, மஞ்சள் ஓடைப்பட்டி, கோட்டைப்பட்டி, ஏழாயிரம்பண்ணை, சோரன்குடி, கொம்பங்கிபுரம் ஆகிய கிராமத்தினர் விவசாயம் செய்து வந்தனர். இந்த கண்மாய்க்கும் வெம்பக்கோட்டை அணை தண்ணீர் கிடைக்காததால் விளை நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. அணையில் இருந்து கண்மாய்க்கு தண்ணீர் வரும் கால்வாய் உடைந்து கிடக்கிறது. இதனை சீரமைத்திட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியினர் நிலத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த பகுதியிலுள்ள வலையபட்டி கண்மாய் சிவகாசி தாலுகாவில் உள்ள 2–வது பெரிய கண்மாய் ஆகும். இதனை நம்பி 6 கிராமங்கள் உள்ளன. தூர்வாராமல் இந்த கண்மாய் பயன்பாடின்றி கிடக்கிறது.

குண்டல் இருப்பு கோபாலபுரம் கண்மாய் 15 ஆண்டுகளாக மழைநீர் தேங்க வழியில்லாமல் கிடக்கிறது. இதேபோல வெற்றிலை ஊருணி பெரிய கண்மாய் மிக ஆழமானதோடு அகலமானது. நிரம்பினால் கடல் போல காட்சி தரும் இந்த கண்மாய் வெளிநாட்டு பறவைகளின் சரணாலயமாக இருந்த காலமும் உண்டு. கீழ தாயில்பட்டி, தெற்கு ஆனைகுட்டம், மேல ஒட்டப்பட்டி பகுதிகள் இந்த கண்மாயினால் பயன்பெற்று வந்தன. நிலம் தரிசாகிப் போனதால் விவசாயிகள் பட்டாசு ஆலைகளை தேடிச் சென்று தொழிலாளியாக வேலை செய்கின்றனர்.

நதிக்குடி, எம்.துரைச்சாமிபுரம், புலிப்பாறைப்பட்டி, கங்கைசமுத்திரப்பட்டி, மம்சாபுரம், காக்கிவாடன்பட்டி ஆகிய 6 ஊராட்சிகளில் உள்ள கிராமங்களை வளம் கொழிக்கச் செய்து 3 போகம் விளைய காரணமாக இருந்த இடையன்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து இப்போது முற்றிலும் நின்று போய்விட்டது.

இந்த கண்மாய்க்கு தண்ணீர் வரும் பகுதியில் செம்மண் காடு அதிகமாக உள்ளது என்றும் சாலைப்பணி போன்றவற்றுக்கு இந்த மண்ணினை அதிக அளவில் வெட்டி எடுத்துச் சென்று விடுவதால் கண்மாய்க்கு தண்ணீர் வராமல் தடைபட்டு விவசாயம் பாதிக்கப்பட்டு விட்டது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

இதேபோல கங்கரைக்கோட்டை கண்மாயை நம்பி இருந்த 15 கிராமத்தினர் தண்ணீருக்கு வழியில்லாததால் விவசாயத்தை கைவிட்டு மாற்றுத்தொழில் தேடிச் சென்று விட்டனர்.

விவசாயிகளின் நலன் கருதி மேலாண் மறை நாடு அருகே 10 வருடத்துக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது. ஆனால் அந்த தடுப்பணைக்கு உரிய முறையில் தண்ணீர் வர வழிவகை காணாததால் இப்போது பயனற்றுக் கிடக்கிறது.

இந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கி நின்ற காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து அப்பநாயக்கன்பட்டி பகுதியில் நெல் மற்றும் சப்போட்டா, கொய்யா, வாழை போன்றவை பயிரிடப்பட்டு வந்தன. இந்த பகுதியில் விளையும் பழங்களுக்கு என தனி ருசி இருந்தது. சங்கரன்கோவில் சந்தைக்கு கொண்டு சென்றால் இந்த பகுதி பழங்களுக்கென்று தனி விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்பட்ட நிலை இருந்ததாம். ஆனால் இப்போதோ எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

வெம்பக்கோட்டை பெரிய கண்மாயின் முக்கால் பகுதி சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. அணையில் இருந்து இந்த கண்மாய்க்கு தண்ணீர் வராததால் அதை நம்பி பயிரிடப்பட்ட பயிர்கள் கருகி கிடக்கின்றன. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சுந்தரபாண்டியன் கூறியதாவது;–

கண்மாய்களை நம்பி இருந்த விவசாயிகளுக்கு தற்போதைய நிலை மிகவும் வேதனையை தந்துள்ளது. பலர் பட்டாசு ஆலைகளை தேடி வேலைக்கு சென்று விட்டனர். சிலர் ஊரை விட்டு இடம் பெயர்ந்து வருகின்றனர். மேலும் சிப்பிப்பாறை பகுதியில் நிலம் தரிசாகிப் போனதால் விளைநிலங்கள் பட்டாசு ஆலை கட்டிடமாக மாறி வருகின்றன.

பலர் நிலங்களை விற்று வருகின்றனர். விவசாயத்தை காப்பாற்ற வேண்டுமானால் முதலில் விவசாயியை காப்பாற்ற வேண்டும். இதற்கு அனைத்து கண்மாய்களையும் மராமத்து செய்ய வேண்டியது அவசியமாகும். மண்டிக்கிடக்கும் சீமை கருவேல மரங்களை ஒழிக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் வெம்பக்கோட்டை பகுதியில் இனி விவசாயமே செய்ய முடியாத நிலை உருவாகி விடும். இதனை சுட்டிக்காட்டி பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். போராட்டமும் நடத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.

வெம்பக்கோட்டை பகுதியில் மானாவாரியில் ஏராளமானோர் சூரியகாந்தி, பருத்தி மற்றும் அவரி பயிரிட்டு வந்துள்ளனர். இவற்றில் அவரி இலை மருத்துவ குணம் கொண்டதாகும். அதனை உலர்த்தி வைத்து பாதுகாத்துக்கொண்டால் ஒரு வருடம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். இதனால் பருவமழைக் காலத்த்தில் இதனை பயிரிட்டு அறுவடை செய்தாலும் அதனை போதிய விலை கிடைக்கும் வரை விவசாயிகள் பாதுகாத்து வைத்து விற்பது வழக்கமாகும். இதற்காக குடோன் வைத்து பலர் பயன்பெற்று வந்துள்ளனர். இதனை வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வாங்கிச்செல்வார்களாம். ஆனால் இப்போது அந்த நிலை இல்லாவிட்டாலும் குடோன்கள் மட்டும் நினைவுச்சின்னமாக காட்சி தந்து கொண்டிருக்கின்றன.

கிராமப்புற மக்களுக்கு வருடத்துக்கு கட்டாயமாக 100 நாள் வேலைகொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய, மாநில அரசுகள் கொண்டுவந்த திட்டத்தை பயன்படுத்தி முறையாக கண்மாய்களை சீரமைத்து இருந்தால், அனைத்து கண்மாய்களுக்கும் நீர்வரத்து இருந்து இருக்கும். ஆனால் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாததோடு பொதுமக்களும் நமது கண்மாயினை பாதுகாத்திட அரசு நமக்கு ஊதியம் கொடுக்கிறது என்ற எண்ணம் கொள்ளாததால் இந்த காலக்கட்டத்தில் நீர்நிலைகள் வறண்டு போய்விட்டன. 100 நாள் திட்டத்தினால் விவசாயம் பார்த்திட தொழிலாளர்கள் வராமல் போய்விட்டனர் என விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

 

PREV
click me!

Recommended Stories

டிசம்பர் மாதத்தில் மழை எப்படி இருக்கும்? அடுத்தடுத்து உருவாகும் புயல்? டெல்டா வெதர்மேன் முக்கிய தகவல்
விஜய் வீட்டில் ராகுலில் முகமூடி பிரவீன்..! திமுகவை வெறுப்பேற்றும் காங்கிரஸ்..! தவெகவை வைத்து ஆடுபுலி ஆட்டம்..!