அவகாசம் கொடுக்க மறுத்து, ஆக்கிரமித்த விளை நிலங்களை அகற்றிய அதிகாரிகள்…

Asianet News Tamil  
Published : Nov 06, 2016, 12:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
அவகாசம் கொடுக்க மறுத்து, ஆக்கிரமித்த விளை நிலங்களை அகற்றிய அதிகாரிகள்…

சுருக்கம்

மயிலம்,

வீடூர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாயிகளுக்கு காலக்கெடு தர மறுத்து காவலாளர்கள் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

விக்கிரவாண்டி அருகே வீடூர் கிராமத்தில் வீடூர் அணை உள்ளது. 32 அடி கொள்ளளவு இந்த அணை மூலம் விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த சுமார் 3200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்த நிலையில் அணையின் நீர்தேக்க பகுதிகளில் விவசாயிகள் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பருவமழை காலங்களில் அணையில் அதிகமாக தண்ணீர் தேக்கி வைக்க முடிவதில்லை.

எனவே கோடை காலங்களில் அணை வறண்டுவிடுவதுடன், இதன் பாசனபகுதியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு பருவமழையின் போதும் அணை அதன் முழு கொள்ளவை விரைவில் எட்டியதால், அதிகப்படியான நீர் உபரிநீராக சங்கராபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

அதாவது அதிகப்படியாக தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு விநாடிக்கு 30 ஆயிரத்து 400 கன அடி வரையில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி அணையில் 15.8 அடி தண்ணீர் உள்ளது.

இதே நிலை தொடர்ந்து நீடிக்காமல் இருக்கும் வகையில், அணையில் அதிகளவில் தண்ணீர் தேக்கி வைப்பதை கருத்தில் கொண்டு நீர்தேக்க பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதில் மயிலம் அருகே உள்ள பாதிராப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளில் 150 பேர் சுமார் 850 ஏக்கர் அளவிலான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து நெல், கரும்பு போன்ற விவசாய பயிர்களை சாகுபடி செய்திருந்தனர்.

இந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து அதிகாரிகள் உரிய அறிவிப்புகள் கொடுத்தும் விவசாயிகள் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.

இதையடுத்து, கடந்த 19–ஆம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பொக்லைன் எந்திரத்துடன் அதிகாரிகள் சென்றனர். அப்போது அங்கிருந்த விவசாயிகள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை உறுதியாக அகற்றுவோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து விவசாயிகள் தங்களது பயிர்களை அறுவடை செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கேட்டனர். அதன்பேரில் 15 நாள்கள் அவகாசம் கொடுத்துவிட்டு, தற்காலிகமாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அங்கிருந்து அதிகரிகள் அனைவரும் திரும்பி சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் 15 நாள்கள் காலக்கெடு முடிந்ததை அடுத்து வெள்ளிக்கிழமை காலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிரிராப்புலியூர் கிராமத்துக்குச் சென்றனர். அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்காக 5 பொக்லைன் எந்திரங்களும் அந்த பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் துணை காவல் சூப்பிரண்டு வீமராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் விவேகானந்தம், சப்–இன்ஸ்பெக்டர் கவிதா உள்பட 100–க்கும் மேற்பட்ட காவலாளர்கள்  பாதகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் அனைவரும் அங்கு திரண்டு வந்தனர். இவர்கள் பொக்லைன் எந்திரங்களை வழிமறித்து போராட்டம் செய்தனர். இந்த நிலையில் அங்கு பாதுகாப்புக்காக இருந்த காவலாளர்கள் விவசாயிகளிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விவசாயிகள் தரப்பில், நாங்கள் பயிர் செய்திருந்த கரும்பு பயிர்களை வெட்டுவதற்கு ஆலை நிர்வாகம் அனுமதி தரவில்லை. எனவே, கரும்பு மற்றும் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் ஆகியவற்றை அறுவடை செய்திடும் விதமாக எங்களுக்கு 3 மாதம் வரையில் கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

மேலும் ஆக்கிரமிப்பு என்று கூறப்படும் நிலத்தையொட்டிய பகுதியில் பட்டா நிலங்களும் உள்ளது. எனவே, சரியான முறையில் அளவீடு செய்து அதன் பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் இதை ஏற்க மறுத்துவிட்டனர். ஆக்கிரமிப்புகள் கண்டிப்பாக அகற்றப்படும் என்றும், அனைவரும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறும் அறிவுறுத்தினர்.

இந்த சூழ்நிலையில் திண்டிவனம் தாசில்தார் சசிகலா அங்கு வந்தார். அப்போது அவரை விவசாயிகள் அனைவரும் முற்றுகையிட்டு, அவருடன் வாக்குவாதம் செய்தனர்.

ஏனெனில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக கால அவகாசம் கேட்டு திண்டிவனம் தாசில்தார் சசிகலாவிடம் மனு அளிக்க விவசாயிகள் சென்றனர். அப்போது அவர் மனுவை வாங்கவில்லை.

இதைக் கண்டிக்கும் வகையில் தாசில்தாரை விவசாயிகள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை காவலாளர்கள் அங்கிருந்து கலைத்து விட்டனர்.

மேலும் விவசாயிகள் அனைவரையும் விளை நில பகுதிக்குள் விடமால், இருக்கும் வகையில் காவலாளர்கள் கிராமத்தின் எல்லைப் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்தி வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவலாளர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் பலத்த காவலாளர்கள் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்களை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அங்கு அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்கும் வகையில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

ஹார்வர்டுக்கே டஃப் கொடுக்கும் சீனா.. இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த VIT!
அமைச்சர் துரைமுருகன், கவிஞர் யுகபாரதிக்கு விருது வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..