
பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கத்துடன் நேற்று எண்ணெய் நிறுவனங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில், இடைக்கால நிவாரணமாக கமிஷன் தொகை பெட்ரோலுக்கு 14 பைசாவும், டீசலுக்கு 10 பைசாவும் வரும் 15ம்தேதி முதல் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டதையடுத்து பங்க் உரிமையாளர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்களின் கீழ் பெட்ரோல் பங்க்குகளை நடத்தி வரும் டீலர்களுக்கு கமிஷன் தொகையை (பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.20, டீசல் லிட்டருக்கு 77 பைசா) உயர்த்தி வழங்க கடந்த 2011ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுத்தவில்லை.
இதை கண்டித்து கடந்த இரு நாட்களாக தமிழகம் முழுவதும் 4,400 பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் எண்ணெய் நிறுவனங்களில் பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யவில்லை.
நேற்று தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பங்க்குகளில் பெட்ரோல், டீசல் காலியானது. இன்று முதல் பெட்ரோல் விற்பனை நேர குறைப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்திருந்தனர். போராட்டம் நீடிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது.
இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்களுடன் பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கத்தினர் மும்பையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இடைக்கால நடவடிக்கையாக பெட்ரோலுக்கு லிட்டருக்கு 13.8 பைசாவும், டீசலுக்கு 10 பைசாவும் உயர்த்தி தரப்படும். இந்த உயர்வு வரும் 15ம்தேதி முதல் அமல்படுத்தப்படும். 6 மாதங்களுக்கு ஒரு முறை கமிஷன் தொகை உயர்த்தி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து நிர்வாக மட்டத்தில் ஆலோசனை நடத்த ஒரு வாரம் அவகாசம் வேண்டும்.
அதன் பின்னர் மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி உரிய முடிவெடுக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கத்தினர் ஏற்றுக்கொண்டனர். வரும் 15ம்தேதி வரை போராட்டம் ஒத்தி வைக்கப்படும். கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாதபட்சத்தில் அடுத்த கட்டமாக 15ம்தேதி சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி போராட்டம் தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.