
தமிழகத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற அரசியல் கட்சிகளில் ஒன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்த கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடர்ந்து பட்டியலின மக்களுக்காக குரல் கொடுத்து வரும் நிலையில், விசிகவுக்கும் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி உள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்கள் திருமாவளவனை பின்பற்றி வருகின்றனர்.
அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி பண்ருட்டி ரமேஷ் என்பவர் திருமாவளவனால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் இணைந்தார். பார்ப்பதற்கு திருமாவளவன் போலவே இருக்கும் பண்ருட்டி ரமேஷ், அவரை போல் பேசி தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் வீடியோக்களை போட்டு வருகிறார். பண்ருட்டி ரமேஷை முதன்முறையாக பார்ப்பவர்கள் அவரை திருமாவளவன் என்றே நினைத்து விடுவார்கள்.
அப்படியே அச்சு அசலாக திருமாவளவன் போல் இருக்கும் பண்ருட்டி ரமேஷ் விசிக கொள்கைகளை சமூகவலைத்தளங்களில் பரப்பி வந்தார். இது மட்டுமின்றி பல்வேறு பாட்டுகளுக்கு வாயசைத்து இன்ஸ்டாகிராமிலும் ரீல்ஸ்களை போட்டு வந்தார். இப்படியாக தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வந்த பண்ருட்டி ரமேஷ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாரடைப்பால் திடீர் மரணம்
திருமாவளவன் போல் இருப்பதால் பண்ருட்டி ரமேசுக்கு விசிகவினர் மத்தியில் நல்ல மதிப்பு, மரியாதை இருந்து வந்தது. இப்போது பண்ருட்டி ரமேஷ் மறைவு செய்தியை கேட்டு விசிகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பண்ருட்டி ரமேஷ் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வெள்ளந்தியான மனிதனாகத் தெரிந்தது
''விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி பண்ருட்டி ரமேஷ்! தோற்றத்தில் அவரது கட்சியின் தலைவர் திருமாவளவன் போலவே இருப்பார். பாட்டுக்கு வாயசைத்து, நிறைய காணொளிகள் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார். சிலவற்றை பார்க்கையில், வெள்ளந்தியான மனிதனாகத் தெரிந்தது.அவர் தற்போது மாரடைப்பால் மறைவெய்தினார் எனும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்கள்'' என்று இடும்பாவனம் கார்த்தி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
விசிக இரங்கல்
''கடலூர் மாவட்டம் பண்ருட்டி டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த டிக் டாக் மன்னன் எழுச்சித்தமிழர் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் சாயலில் அவர்களின் நிழலாக உலா வந்த அண்ணன் பண்ருட்டி திருமா ரமேஷ் அவர்கள் இன்று மாரடைப்பு ஏற்பட்டு கடலூர் கல்யாண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அண்ணார் திருமா ரமேஷ் அவர்களுக்கு எமது செம்மார்ந்த வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்'' என்று விசிக இரங்கல் தெரிவித்துள்ளது.