
விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “எச்சரிக்கை ஸ்ரீதர் வேம்பு எனும் சனாதன நச்சுக்கிருமி!
குழந்தைகளுக்கு அதிகளவு தடுப்பூசிகள் கொடுக்கப்படுவதால் தான் ஆட்டிசம் பாதிப்பு வருகிறது என்று சொல்லி தடுப்பூசிக்கு எதிராக பரப்புரை செய்யும் அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் பதிவை பகிர்ந்துள்ள சோஹோ நிறுவனர் ஸ்ரீதர்வேம்பு இந்த ஆய்வை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இளம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் அதிகளவில் தரப்படுகின்றன. தடுப்பூசி போடும் நடைமுறை இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இதனால் ஆட்டிசம் பாதிப்பும் அதிகரித்து வருகிறது’ என்று கருத்து தெரிவித்துள்ளார். அறிவியலுக்கு எதிரான ஸ்ரீதர் வேம்புவின் பிற்போக்குத்தனமான கருத்துக்கு மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
மூடநம்பிக்கைகளிலும் சடங்குகளிலும் பெரும்பான்மை மக்கள் மூழ்கியுள்ள இந்தியா போன்ற பழமைவாத நாட்டில், தடுப்பூசிகள் – அறிவியல் ஆய்வுகள் மூலம் கோடிக்கணக்கான மக்களை நோய் தொற்றுகளிலிருந்து குணமாக்கவும் - பாதுகாக்கவும் அரசுகள் போராடி வருகின்றன. இத்தகைய ஆபத்தான பிற்போக்கு கருத்துகள் நோய் தடுப்பு இயக்கத்திற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தும்
பகுத்தறிவும், அறிவியல் மனப்பான்மையும் கொண்ட திராவிட இயக்க தலைவர்கள் தமிழ்நாட்டை வழிநடத்திய காரணத்தினால் தான் இன்று கல்வி – மருத்துவம் – சமூக – பொருளாதார காரணிகளில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது.
இளம் தலைமுறையினர் மாடு மேய்க்க வேண்டும், ‘எல்லோரும்’ படித்து கிராமங்களை விட்டு வெளியேறியதால் தான் விவசாய கூலிக்கு ஆளில்லை என்று பேசும் நபர்களும், நவீன அறிவியலின் தாக்கத்தினால் பாரதத்தின் தர்மம் சீரழிவதாகவும், மாட்டு மூத்திரத்தில் நோய்கள் தீரும் என்றும் பேசி வரும் ஸ்ரீதர் வேம்பு போன்றவர்களும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றனர். இந்த கும்பலின் நச்சுக்கருத்தை கேட்டு யாரேனும் குழந்தைகளுக்கு அவசியமான தடுப்பூசிகளை செலுத்தத் தவறினால் ஏற்படும் விளைவுகளை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அறிவியலின் துணையால் கோடிக்கணக்கானோரின் பசிப்பிணி தீர்ந்துள்ளது. நவீன மருத்துவத்தால் நமது குழந்தைகளும் தாய்மார்களும் நலத்துடன் இருக்கின்றனர். உயர் சிகிக்கைகளால் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.
ஸ்ரீதர் வேம்பு போன்ற சனாதன பிற்போக்குவாதிகளின் இத்தகைய ஆபத்தான போக்கை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அறிவியலுக்கு எதிராக பரப்புரை செய்யும் இம்மாதிரியான ஆசாமிகளை வெகு மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.