
பொன்னேரி வட்டத்தில் வர்தா புயலால் இறால், மீன் பண்ணைகள் பலத்த சேதமடைந்துள்ளதால் இவற்றின் உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.
பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் பழவேற்காடு, தொட்டிமேடு, ஔவுரிவாக்கம் அண்ணாமலைச்சேரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இறால், மீன் பண்ணைகள் இருக்கின்றன.
கடந்த 12-ஆம் தேதி தாக்கிய வர்தா புயலால் இங்குள்ள இறால் பண்ணைகள் கடும் சேதத்தைக் கண்டது. இறால், மீன்கள் ஆகியவை நீரில் அடித்துச் செல்லப்பட்ட சோகமும் அரங்கேறியது.
மேலும், மின்சாதனம், இறால் வளர்ப்புக்கு தேவையான உபகரணங்கள் பலத்த சேதம் அடைந்தன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது, இப்பகுதியில் இறால் பண்ணை நடத்தியவர்கள் பெரும் நட்டத்தைச் சந்தித்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டும், வர்தா புயலால் பாதிக்கப்பட்டு மீண்டும் நட்டத்தைச் சந்தித்து உள்ளனர்.
இயற்கை சீற்றத்தால் தொடர்ந்து பல கோடி ரூபாய் நட்டமடைந்து வரும் இறால், மீன் பண்ணைகளுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என இறால் பண்ணை உரிமையாளர்கள் அரசிற்கு கோரிக்கையை விடுத்து உள்ளனர்.