
கௌண்டம்பாளையத்தில் இரண்டு மாதங்களாக தண்ணீர் வராததால் பொங்கி எழுந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பல்லடம் அருகே உள்ள கௌண்டம்பாளையம் பகுதியில் 500–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் அத்திக்கடவு குடிநீர் வீட்டு இணைப்பும், அருகில் உள்ள ஏ.டி.காலனியில் பொது குழாயும் இருக்கிறது.
ஆனால் அத்திக்கடவு குடிநீரும், பொது குழாயில் குடிநீரும் கடந்த இரண்டு மாதங்களாக சரியாக வருவதில்லை. இதனால் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பொங்கி எழுந்த பொதுமக்கள் வெற்றுக் குடங்களுடன் கௌண்டம்பாளையத்தில் பல்லடம் – திருப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும், அந்த வழியாக வந்த அரசு பேருந்தையும் சிறைப் பிடித்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பானது.
இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்றனர். பின்னர், அங்கு சிறைப் பிடிக்கப்பட்டு இருந்த பேருந்தை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆசைத்தம்பி, பல்லடம் தாசில்தார் பாஸ்கரன், நில வருவாய் ஆய்வாளர் பிரபு மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி, போலீசார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்த பேச்சுவார்த்தையில், “15 நாள்களுக்குள் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்கிறோம்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.