
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில வாரங்களாக குறைதீர் கூட்டத்திற்கு வருவபர்கள் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் மண்ணெண்ணெய் கொண்டு வருகின்றனரா என்று தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள் கிழமை அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கும்.
இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைகள் முதல் பொது பிரச்சனைகள் வரை பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக கொடுப்பார்கள்.
கடந்த சில வாரங்களாக இந்த குறைதீர்ப்புக் கூட்டத்திற்கு வருபவர்களில் சிலர் பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இந்த நிலையில் திங்கள் கிழமையான நேற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் எஸ்.ஜெயந்தி தலைமையில் நடந்தது. இதனால் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
ஏற்கனவே சிலர் தீக்குளிக்க முயன்றதால், ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த அனைவரையும் நுழைவு வாயில் பகுதியிலேயே காவலாளர்கள் தடுத்து நிறுத்தி, பைகளில் பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்களை வைத்து இருக்கிறார்களா? என்று தீவிர சோதனை நடத்தினர்.
அப்படியிருந்தும், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி என்பவர் தனது மனைவியைச் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறி, தனது மகனுடன் தீக்குளிக்கும் முடிவில் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துள்ளார்.
இதற்காக தனது மோட்டார் சைக்கிளின் ‘சீட்’ கவரில் ஒரு பாட்டிலில் பெட்ரோல் வைத்து இருந்தார்.
இதை கவனித்த காவலாளர்கள், மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோல் பாட்டிலை கைப்பற்றினார்கள். இதை அறிந்த கருப்புசாமி, தனக்கு நியாயம் வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினார். உடனே காவலாளர்கள் கருப்புசாமியையும் அவருடைய மகனையும் அங்கிருந்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்தச் சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.