வானதி சீனிவாசன், தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் மீது வெறுப்பைத் தூண்டுவோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்கிறார்.
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாகவும், இதற்கு பயந்து இங்கு பணியாற்றி வந்த ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கே திரும்பிச் செல்வதாகவும் வதந்தி பரவுகிறது. வட மாநிலத்தவரை தமிழர்கள் தாக்குவது போல போலியான வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டன.
செவ்வாய்க்கிழமை ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட விஷமிகள், தமிழர்கள் வடமாநிலத்தவரைத் தாக்குவதால்தான் அவர்கள் அஞ்சி வெளியேறுகிறார்கள் என்று புரளியைக் கிளப்பிவிட்டுள்ளனர்.
இதனைத் தடுக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. காவல்துறை போலி வீடியோவைப் பகிர்ந்து மூவரைக் கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், வெறுப்பைத் தூண்டும் வகையில் வதந்தியைப் பரப்புபவர்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். போலியான தகவல்களை பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், பாஜக மகளிரணி தேசியத் தலைவரும் கோவை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஓர் அறிக்கை விட்டுள்ளார். அதில், வடமாநிலத் தொழிலாளர்கள் மீது வெறுப்பைத் தூண்டும் வகையில் செயல்படுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்கிறார். "தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைக்கும் தொழிலாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டியது தமிழக அரசின் கடமை. அதனை முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின், தான் தேசிய அரசியலில்தான் இருக்கிறேன் என்று கூறியதைச் சுட்டிக்காட்டிய வானதி, "அவரது பேச்சை நிரூபிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. 'இந்தியா என்பது ஒரே தேசம். இந்த தேசம் அனைவருக்கும் சொந்தம்' என்பது தான் தேசிய அரசியல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் எங்க தோஸ்து.. நாங்க பயந்து சொந்த ஊருக்கு போகல! வடமாநிலத்தினருடன் ஏசியாநெட் தமிழ் நேர்காணல்