உண்மையிலேயே வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்களா? என்பதை கண்டறிய ஏசியாநெட் தமிழ் சார்பில் இன்று நேரடியாக களத்தில் இறங்கி, வடமாநிலத்தினர்களிடம் நேரடியாக கருத்து கேட்கப்பட்டது.
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாகவும், இதற்கு பயந்து இங்கு பணியாற்றி வந்த ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கே திரும்பிச் செல்வதாகவும் செய்தி பரவியது. இதனிடையே வடமாநிலத்தவர்களை தமிழர்கள் தாக்குவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் பேசு பொருள் ஆன நிலையில், வைரலாகும் அந்த வீடியோக்கள் போலியானது என தமிழ்நாடு காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற போலியான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து இருந்தனர்.
இந்நிலையில், உண்மையிலேயே வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்களா? என்பதை கண்டறிய ஏசியாநெட் தமிழ் சார்பில் இன்று நேரடியாக களத்தில் இறங்கி, சென்னை சென்ட்ரலில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக காத்திருந்த வடமாநிலத்தினர்களிடம் நேரடியாக கருத்து கேட்கப்பட்டது. அப்போது தாங்கள் பண்டிகைக்காக தான் சொந்த ஊருக்கு செல்வதாகவும், ஹோலி பண்டிகை வருவதனால் அதனை கொண்டாடவே அங்கு செல்வதாகவும், மற்றபடி இங்கு பாதுகாப்பில்லாமல் செல்கிறோம் என்று சொல்வதெல்லாம் பொய் என தெரிவித்தனர்.
இங்கு தமிழ்நாட்டில் அனைவரும் தங்களை நண்பர்களைப் போலவே நடத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஹோலி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு ஒரு மாதத்தில் மீண்டும் சென்னை திரும்புவோம் என அவர்கள் கூறினர். தங்களுக்கு இங்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறி தற்போது பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.