சென்னை இசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை திமுக கொடி கட்டிய சொகுசு கார் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஜக இந்த சம்பவத்தை கண்டித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அறங்கேறியுள்ளது. அதன் படி சென்னை இசிஆர் சாலையில் காரில் சென்ற பெண்களை திமுக கொடி கட்டிய சொகுசு கார் துரத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இந்த காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் எப்போது நடைபெற்றது என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு செயல்பாட்டிற்கு எதிராக பாஜக விமர்சித்துள்ளது.
இசிஆரில் பெண்களை துரத்திய கார்
இது தொடர்பாக பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ECR சாலையில் காரில் சென்ற பெண்களைத் திமுக கொடியுடன் கூடிய மற்றொரு காரில் வந்த போதை ஆசாமிகள் வெறிகொண்டு துரத்துகின்றனர், பயந்த அந்த இளம் பெண்கள் அலறித் துடிக்கின்றனர், ஏதோ சினிமா காட்சி போல தோன்றும் இந்த காணொளி வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எல்லாம் திமுகவின் பெயர் அதிகம் அடிபடுகிறதே, திமுக-க்காரன் என்பது குற்றம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அடையாளமா என்ன?
பிற மாநில பெண்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி தெருவில் இறங்கிப் போராடிய திரு. கனிமொழி உள்ளிட்ட திமுக போலி பெண் போராளிகள் இதுபோன்ற அட்டூழியங்களுக்கெல்லாம் பொங்க மாட்டார்களா? நாட்டில் உள்ள பாலியல் குற்றவாளிகளை எல்லாம் உறவுமுறை சொல்லிக்கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் நிற்காமல் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் அறிவார்ந்த அறிவாலய தலைவர்கள், இந்தப் பெண்களை என்ன குறை சொல்லிக் கொச்சைப்படுத்தப் போகிறார்கள்?
கடும் நடவடிக்கை எடுத்திடுக
எனவே, பொதுவெளியில் தங்களது அராஜகத்தால் பெண்களை அச்சுறுத்திய அந்த கயவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, அரக்கத்தனமாக நடந்து கொண்ட அந்த குற்றவாளிகள் தமிழக மக்கள் முன் அடையாளம் காட்டப்பட வேண்டும் என தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலினை வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.