வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 11 பெண்கள் படுகாயம்; ஓட்டுநர் கைது…

First Published Dec 5, 2016, 9:12 AM IST
Highlights


திருவாரூர்,

திருவாரூர் அருகே எதிரே வந்த லாரிக்கு வழிவிட்டபோது, மீன் ஏற்றி சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 11 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து வேனின் ஓட்டுநர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் இருந்து மீன்களை ஏற்றி கொண்டு வேன் ஒன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் திருவாரூர் வழியாக தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை நாகை ஆழியூரை சேர்ந்த சுரேஷ் (30) என்பவர் ஓட்டினார்.

நாகைப் பகுதியை சேர்ந்த மீனவ பெண்கள் அந்த வேனில் பயணம் செய்தனர். அதிகாலை நேரம் என்பதால் திருவாரூர் - தஞ்சை சாலையில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் திருவாரூர் அருகே உள்ள கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்தபோது எதிரே லாரி ஒன்று வந்தது.

அந்த லாரிக்கு வழி கொடுக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக வேன் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த கல்பனா (40), அஞ்சலி தேவி (36), கல்விக்கரசி (35), செந்தமிழ்ச்செல்வி (32), செல்வி (50), குமரவள்ளி(40), லட்சுமி (60), தேவி (50), கலைவாணி (50), ராமாமிர்தம் (40), மற்றொரு அஞ்சலி தேவி (40) ஆகிய 11 பேர் படுகாயம் அடைந்தனர். வேனில் கொண்டு வரப்பட்ட 1 டன் மீன்களும் சாலையில் சிதறின.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கொரடாச்சேரி காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து வேன் ஓட்டுநர் சுரேசை கைது செய்தனர்.

click me!