
கரூர் சம்பவத்துக்கு பிறகு தவெக பொதுக்குழு கூட்டம் நேற்று கூடிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் மீது விஜய் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். ''கரூர் விவகாரத்தில் பொய் மூட்டைகளால் நம்மை பற்றி அவதூறு பரப்புகிறார் முதல்வர் ஸ்டாலின். சட்டப்பேரவையில் முதல்வர் பேசியது வடிகட்ட பொய். தவெகவுக்கு எதிராக முதல்வர் எவ்வளவு வன்மத்தை கக்கியுள்ளார். ஆனால் இதெல்லாம் ஏன் நடந்தது? எதற்கு நடந்தது? என மக்கள் கேள்வி கேட்டதை முதல்வர் மறந்து விட்டாரா?
கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கேட்ட கேள்விக்கு திமுக வழக்கறிஞர்கள் வாய்மூடி நின்றனர். உச்சநீதிமன்றம் திமுக அரசின் தலையில் கொட்டியது. கரூர் சம்பவம் நடந்த உடன் அவசரம் அவசரமாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது ஏன்? என பல்வேறு கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பியது'' என்று விஜய் கூறியிருந்தார்.
இந்த நிலையில், விஜய் செய்வது பித்தலாட்ட அரசியல் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய வைகோ, ''41 உயிர்கள் பலியான பிறகு விஜய் திருச்சியில் கூட தங்காமல் உடனே சென்னை சென்றார். பாதிக்கப்பட்டவர்களை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்தார். துக்க வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவிப்பது தான் மரபு. ஆனால் விஜய் தான் இருக்கும் இடத்தில் அவர்களை வரவழைத்து ஆறுதல் தெரிவித்து இருப்பது அரசியலில் யாரும் செய்யாத பித்தலாட்டத்தனம்.
ஸ்டாலின் பெருந்தன்மை
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்ததை அறிந்ததும் நான் இரவு 9.30 மணிக்கு தூத்துக்குடி சென்று விட்டேன். அதிகாலை 3 மணி வரை பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தேன். எனக்கு உடல்நிலை சரியில்லாததால் கரூர் செல்ல முடியவில்லை. கரூர் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையுடன் கூறியுள்ளார்.
கனவு சுக்குநூறாகிவிடும்
அதன்பின்பு சட்டப்பேரவையில் கூட விஜய் பெயரையோ, அவரது கட்சி பெயரையோ சொல்லவில்லை. நிகழ்ச்சி நடத்துபவர்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று தான் பேசினார். இதற்கு சகட்டு மேனிக்கு முதல்வரை திட்டியுள்ள விஜய், நான் தான் ஆட்சிக்கு வருவேன். எங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என விஜய் பேசியிருக்கிறார். அரசியலில் ஆத்திச்சூடி கூட தெரியாத மனிதர், அடுத்த முதல்வர் நான் தான் என்று சொல்கிறார். விஜய் கனவுகள் அனைத்தும் சுக்கு நூறாகிவிடும் என்று நான் ஏற்கெனவே தெரிவித்தேன்'' என்று கூறியுள்ளார்.