
Vaiko removes Mallai Sathya from MDMK : மதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல் தலை தூக்கியுள்ளது. தற்போது மதிமுக பொதுச்செயலாளராக உள்ள வைகோவிற்கும், துணை பொதுச்செயலாளராக உள்ள மல்லை சத்யாவிற்கும் இடையே ஏற்படுள்ள மோதலால் கட்சியில் இருந்து மல்லை சத்யா நீக்கப்பட்டுள்ளார். வைகோவின் மகனான துரை வைகோ 2019 ஆம் ஆண்டு முதல் மதிமுகவில் முதன்மைச் செயலாளராக முக்கிய பொறுப்பு வகிக்கத் தொடங்கினார். இது கட்சியில் வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகளை எழுப்பியது, குறிப்பாக மல்லை சத்யா மற்றும் துரை வைகோ ஆதரவாளர்களிடையே மோதலை அதிகரித்தது.
இதனையடுத்து துரை வைகோவின் நிர்வாக முடிவுகள் மற்றும் கட்சியில் ஜாதி அடிப்படையிலான நியமனங்கள் குறித்து மல்லை சத்யா பகிரங்கமாக விமர்சித்தார். இதனால் இரு தரப்பினரிடையே மோதல் தீவிரமடைந்தது. ஒருகட்டத்தில் கோபமடைந்த துரை வைகோ, தனது முதன்மைச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார், இதனையடுத்து வைகோவின் சமாதான முயற்சியில் ராஜினாமா முடிவில் இருந்து துரை வைகோ பின்வாங்கினார்.
அதே நேரம் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்கக் கோரி, துரை வைகோவின் ஆதரவாளர்கள் தீர்மானம் நிறைவேற்றினர். இதற்கு மல்லை சத்யாவின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மோதல் ஒரு கட்டத்தில் உச்சத்தை தொட்ட நிலையில் மல்லை சத்யாவை விடுதலைப் புலிகளின் மாத்தையாவுக்கு ஒப்பிட்டு, அவர் தனக்கு துரோகம் செய்ததாக வைகோ பகிரங்கமாக கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லை சத்யா, வைகோவின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார், மேலும் கட்சி தலைமை தனது 32 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை அவமதித்ததாக குற்றம்சாட்டினார். வைகோ, கட்சியை தனது மகனுக்கு வழங்குவதற்காக தன்னை துரோகியாக சித்தரிப்பதாகவும், குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ இப்போது அதையே செய்கிறார் என்றும் குற்றம்சாட்டினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்கி வைகோ உத்தரவிட்டுள்ளார்.