
பெட்ரோல் நிலையங்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள பகுதியில் மொபைல் வேலட் மற்றும் பந்து முனை இயந்திரம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் த.பொ.ராஜேஷ் அறிவுறுத்தினார்.
“நாட்டின் அனைத்து இடங்களிலும் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுரையின்படி அனைத்து இடங்களிலும் மொபைல் வேலட், ஸ்வைப் இயந்திரம் போன்ற வசதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கடலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 130 பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் இந்த வசதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்புக் கழகம் பெட்ரோல் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும்போதும், நிரப்பிய பிறகும் பணம் செலுத்துவதற்காக எரிபொருள் நிரப்பும் இடத்திலிருந்து எளிதில் தீப்பற்றக்கூடிய பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள பகுதியில் மொபைல் வேலட் மற்றும் பந்து முனை இயந்திரம் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.
மேலும், இந்த எளிதில் தீப்பற்றக்கூடிய பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள பகுதிக்கு அப்பால் மட்டுமே பணம் செலுத்துவதற்கு மேற்கண்ட வசதிகளை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பொதுமக்களும், பெட்ரோல் நிலைய உரிமையாளர்களும் எரிபொருள்கள் நிரப்பும்போதும், நிரப்பிய பிறகும் எளிதில் தீப்பற்றக்கூடிய பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ள பகுதியில் பணம் செலுத்துவதற்காக மொபைல் வேலட், பந்து முனை இயந்திரம் ஆகியவற்றை பயன்படுத்தாமல் தவிர்த்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.