நகர்ப்புற தேர்தல் தேதி அறிவிப்பு.. பிப்.,19 ஆம் தேதி வாக்குபதிவு .. பேரணிக்கு தடை..முக்கிய அறிவிப்பு வெளியீடு

By Thanalakshmi VFirst Published Jan 26, 2022, 7:11 PM IST
Highlights

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்புகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலுள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆணையர் பழனிகுமார் தேர்தல் குறித்தான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 4 ஆம் தேதி அன்று மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நகர்ப்புற தேர்தலில் ஜனவரி 28 ஆம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் , பிப்ரவரி 4 ஆம் தேதி மனுதாக்கல் செய்வதற்கான இறுதிநாள், பிப்.,5 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை,பிப்ரவரி 7 ஆம் தேதி வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெறும் இடங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.தமிழகத்தில் 649 உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 21 மாநகராட்சி,138 நகராட்சி,490 பேரூராட்சி ஆகிய இடங்களுக்கு தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குபதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிக்கலாம் என்றும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றாளர்கள் வாக்களிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மார்ச் 2 ஆம் தேதி வெற்றி பெற்ற புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 31,029 வாக்குசாவடிகள் அமைக்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2.79 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.அதில் ஆண்கள் 1,37,06,793 பேரும் பெண்கள் 1,42,45,600 பேரும் வாக்களிக்க உள்ளனர். மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பேரணி நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.மேலும் உள் அரங்கு கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் பரப்புரை ஊர்வலம், சைக்கிள் பேரணி போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது. 300 பேர் மட்டுமே கலந்துக்கொள்ளும் தேர்தல் பரப்புரைக்கு மட்டுமே அனுமதி என்று சொல்லப்பட்டுள்ளது.நீதிமன்ற உத்தரவுப்படி வீடு வீடாக சென்று 3 பேர் மட்டுமே வாக்கு சேகரிக்க அனுமதி மாநில தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.

click me!