
உற்பத்தித்துறையில் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான தமிழகம், கடந்த ஓருஆண்டுக்கும்மேலாக நிலவும் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக தொழில்துறையின் வளர்ச்சி ‘செம அடி’வாங்கியுள்ளது.
கடந்த 2016-17ம் ஆண்டில் மாநிலத்தில் தொழில்துறையின் வளர்ச்சி எப்போதும் இல்லாத அளவுக்கு மிக மிகக் குறைவாக 1.65 சதவீதத்துக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது என்று ரிசர்வ்வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, தெலங்கானா
அதேசமயம், நிலையான அரசு, குழப்பமற்ற ஆட்சி, அமைதியான சூழல் இருப்பதன் காரணமாக அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரேதசத்தில் தொழில்துறை வளர்ச்சி கடந்த ஆண்டில் 10.36 சதவீதமும், தெலங்கானா மாநிலம் 7.1 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளன.
மறைவால், குறைந்தது
தமிழகமும் ஒரு நேரத்தில் அனைத்து மாநிலங்களையும் தொழில்துறை வளர்ச்சியில்ஆச்சர்யத்தில் ஆழ்த்தியதுதான். ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் மாநிலத்தில் தொழில்துறை வளர்ச்சியும் மெல்ல மறையத் தொடங்கியது. கடந்த 2014-15, 2015-16ம் ஆண்டில் மாநிலத்தின் தொழில்துறை வளர்ச்சி 7.11 சதவீதம் இருந்தது தமிழக்தில் நிலையான ஆட்சி இருந்ததற்கும், முதலீட்டாளர்கள் நம்பிக்கையை பெற்றதன் சாட்சியாகும்.
நிலையற்ற தன்மை
ஆனால், தற்போது ஆளும் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை, கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர்.
என்ன குறை?
மாநிலத்தில் சாலைவசதி, ரெயில் போக்குவரத்து, விமானப்போக்குவரத்து ஆகியவை சிறப்பான நிலையில் இருந்தபோதிலும், அரசியல் சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் தொடர்ந்து தயங்கி வருகிறார்கள்.
இது தான் காரணமா?
இது குறிதது திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அப்ஹிஜித் சென் கூறுகையில், “ பொதுவாக நாடு முழுவதும் தொழில்துறை உற்பத்தி என்பது சிறப்பாக இல்லை என்பது முதலீட்டாளர்கள் கருத்தாகும். குறிப்பாக உற்பத்தி, தொழில்துறை இன்னும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பவில்லை. ஆனால், தமிழகத்தில் மாநிலத்துக்குள் ஏற்பட்ட அரசியல் சிக்கல்கள், நிலையற்ற தன்மை, குழப்பமே தொழில் வளர்ச்சியை பாதிக்கிறது.
தமிழகத்தில் சாலைபோக்குவரத்து, விமானப்போக்குவரத்து, நீர்வழி என அனைத்தும் சிறப்பாக இருந்தும் முதலீட்டை ஈர்க்க முடியவில்லை. மஹாராஷ்டிரா, குஜராத்தைக் காட்டிலும், நல்ல வசதிகள் இருந்தும், அரசியல் குழப்பத்தால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதித்துள்ளது’’ என்றார்.
எதிர்க்கட்சிகள் ஆதரவு
ஆனால், எதிர்க்கட்சிகளோ மாநிலத்தில் சிறப்பான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றன என்று பெருமை கொள்கின்றனர். 3 பெரிய துறைமுகங்கள், அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் சிறந்த ரெயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து இருக்கிறது. இருந்தும் தொழில்வளர்ச்சி குறைந்து வருவது அரசியலில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையினால்தான் என்று எதிர்க்கட்சிகள் வேதனைப்படுகிறார்கள்.
பி.டி.ஆர். தியாகராஜன் கருத்து
இது குறித்து தி.மு.க. எம்.எல்.ஏ.வும், பொருளாதார ஆய்வாளரான பி.டி.ஆர். பழனிவேல்தியாகராஜனிடம் கேட்டபோது, “ மாநிலத்தில் முதலீடு திடீரென குறைவதற்கு 3 முக்கிய காரணிகள் இருக்கின்றன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். இந்த பிரச்சினை தான் நாடுமுழுவதும் பரவிக்கிடக்கிறது.
வரமாட்டார்கள்...
2வது காரணம், அரசியல் நிலையற்ற தன்மையும், முதலீட்டாளர்களை அரசும், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் நடத்தும் விதமாகும். அரசியல்நிலையற்ற தன்மை இருக்கும் முறை முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள். தொடர்ந்து மாநிலத்தில் தொழில்செய்யவும் விரும்பமாட்டார்கள். ஒரு நிறுவனத்துக்கு சார்பாக இருக்கும் அரசு, அந்த அரசுக்கு பிறகு வரும் புதிய அரசும், அதே நிறுவனத்துக்கு சார்பாக நடந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஒரு ஆண்டாக
ஆனால், மற்ற தென் மாநிலங்களில் உள்ள அரசுகள் நிலையானதாக இருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டாக ஆட்சியிலும், அரசியலிலும் பலமாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. , ஆந்திரா அல்லது தெலங்கானாவில்தொழில்வளர்ச்சி இருந்தால், அது ஆட்சியில் நிலையான தன்மை, அரசியல் நிலைத்தன்மை இருப்பதால்தான்’’ என்று தெரிவித்தார்.
தொழிலதிபர் என்ன சொல்கிறார்கள்?
சென்னையில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்தில், “ அதிமுக பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முதல்வருமான ஜெயலலிதா மறைந்தபின், தொழில்நிறுவனங்களின் மனநிலை மாறிவிட்டது. தமிழகத்தில் முதலீடு செய்யவேண்டும் என்ற நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்யத் தொடங்கிவிட்டன. இப்போது தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஆட்சியிலும், அதிமுக கட்சியிலும் தலைவர்கள் இல்லை. இதனால்,முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய தயங்குகிறார்கள்’’ என்றார்.