
சென்னையில் குப்பை அகற்றும் பணிகள் தனியார் மயமாக்கப்படுமா ? பொது மக்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு…
சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில், செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தனியார் மயமாக்குவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில், பொது மக்களும், துப்புரவுத் தொழிலாளர்களும் அதிகாரிகளை முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
427 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை மாநகராட்சியில், 12 லட்சம் வீடுகளும், 6 லட்சம் வர்த்தக ரீதியான கட்டடங்களும் உள்ளன. அவற்றில், 70 லட்சம் பேர் வசிக்கின்றனர்.அவர்கள் மூலம் தினமும், 5,500 டன் குப்பை வெளியேற்றப்படுகிறது. அவை, கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த பணிக்கான திட்டத்தை தனியார் நிறுவனம் மூலம், மேம்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்கான கருத்து கேட்பு கூட்டம் மாதவரத்தில் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியில் சுகாதாரத் துறை அதிகாரிகள், பொது மக்கள் துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
தனியார் மயமாக்கும் இத்திட்டத்துக்கு பொது மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த கூட்டமே ஒரு சம்பிரதாயமான கருத்து கேட்பு கூட்டம் என, அதிருப்தி தெரிவித்தனர்.தனியார் நிறுவனம், குப்பை அகற்றும் திட்டத்தை சரியாக செயல்படுத்துமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
அதே நேரத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.இதையடுத்து கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது