
சிவகங்கை
புதுவாழ்வுத் திட்டத்தைக் கைவிடாம;, தொடர வேண்டும் அல்லது புதுவாழ்வுத் திட்ட ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும் என்று புதுவாழ்வுத் திட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏழை, எளிய மக்களைக் கண்டறிந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு உலக வங்கி உதவியுடன் புதுவாழ்வு திட்டம் என்ற அமைப்பை கடந்த 2005–ஆம் ஆண்டு செயல்படுத்தியது.
இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய அளவில் கிராமங்களில் உள்ள பின்தங்கியவர்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் ஆகியோர்களை கணக்கெடுத்து, அதனடிப்படையில் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட திட்டங்கள் ஏற்படுத்தி செயல்படுத்தப்பட்டது.
முதற்கட்டமாக இந்தத் திட்டம் 15 மாவட்டங்களில் தொடங்கபட்டது. கடந்த 2011–ஆம் ஆண்டு சிவகங்கை உள்பட 11 மாவட்டங்களில் இரண்டாவது கட்டமாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, கண்ணங்குடி, எஸ்.புதூர் ஆகிய 5 ஒன்றியங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள், நலிவுற்றோருக்கு வட்டியில்லா கடன் வழங்கி தொழில் தொடங்க உதவுவது, இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது மற்றும் மகளிர் குழுக்களுக்கு உதவுவது என்ற மூன்று வகையான திட்டங்கள் செயல்படுத்தபட்டது.
இந்தத் திட்டத்தில் மாவட்டத் திட்ட மேலாளர், உதவித் திட்ட மேலாளர்கள், அணித் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், கணக்காளர்கள் என பலர் பணி புரிந்தனர்.
இந்த நிலையில் புதுவாழ்வுத் திட்டத்தை வருகிற 30–ஆம் தேதியுடன் கைவிட அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திள் உள்ள 26 மாவட்டங்களிலும் புதுவாழ்வுத் திட்டம் கலைக்கப்பட்டு விடுவதால் இதில் பணிபுரியும் ஊழியர்கள் வேலையிழந்து உள்ளனர்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் புதுவாழ்வு திட்ட அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் தங்களில் நிலையை கருத்தில் கொண்டு இந்தத் திட்டத்தை தொடர வேண்டும் அல்லது மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மேலும், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நேற்று சிவகங்கையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் உள்ளிருப்புப்ப் போராட்டமும் நடத்தினர். இந்த உள்ளிருப்புப் போராட்டத்தால் திட்ட பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.