
இராமநாதபுரம்
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதையும், சிறைப் பிடித்து செல்வதையும் மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் கோரிக்கை விடுத்துள்ளது.
இராமநாதபுரத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்டப் பொதுச் செயலாளர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார்.
இதில், “ஜூலையில் திண்டுக்கல்லில் நடக்கும் மாநில மாநாட்டில் ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும்.
இராமநாதபுரத்தில் பயிர் காப்பீடு செய்து விடுபட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பதும், படகுகளை சேதப்படுத்துவதும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதையும், மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்” என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் மணிபாரதி, மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், துணைத் தலைவர் வெங்கடாச்சலம், நயினார்கோவில் ஒன்றியத் தலைவர் ரவி, பரமக்குடி இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.