
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் மன்னார் வளைகுடா தேசிய பூங்கா பகுதியில் அடுத்த பத்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழும் பகுதியான மன்னார் வளைகுடா பகுதியில் அரசால் உயிர்கோள காப்பக அறக்கட்டளை அமைக்கப்பட்டு தேசிய பூங்காவாக அறிவித்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த தேசிய பூங்கா பகுதியில் வாழும் அரிய கடல் வாழ் உயிரினங்களை பாதுகாப்பதற்கும், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்படி, அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பகுதியில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் இராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், வன உயிரின காப்பாளர் தீபக்பெல்கி வரவேற்றுப் பேசினார். முதன்மை பாதுகாவலர்கள் டாங்கே, தெபாசிஸ் ஜனா ஆகியோர் பேசினர்.
இந்திய வனஉயிரின நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சிவக்குமார் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக பகுதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வருங்காலங்களில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள், வனஉயிரினங்கள், அரிய கடல்வாழ் உயிரினங்களை காப்பதற்காக எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கிக் கூறினார்.
இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கடல்வாழ் உயிரின விஞ்ஞானிகள், பாதுகாவலர்கள், வனகாப்பாளர்கள், வனவர்கள் உள்பட பலர் பங்கேற்று பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சியில், வனச்சரகர்கள் கணேசலிங்கம், சிக்கந்தர் பாட்சா உள்பட வனத்துறையினர் பங்கேற்றனர்.