
சிவகங்கை
சிவகங்கையில் உள்ள ஊர்க்காவலன் கோவிலில் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில், கலந்து கொண்டு காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் அடங்க மறுத்து சீறிப்பாய்ந்த காளைகளுக்கும் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள விராமதி கிராமத்தில் புகழ் பெற்ற ஊர்காவலன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் சில காரணங்களால் கடந்த 17 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. இதேபோல் திருவிழாவையொட்டி நடத்தப்படும் மஞ்சு விரட்டும் பதினேழு ஆண்டுகளாக நடைபெறவில்லை.
இந்த நிலையில் ஊர்காலவன் கோவிலில் இவ்வாண்டு திருவிழா நடத்த விராமதி கிராமத்தினர் முடிவு செய்து அதன்படி திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டும் அசத்தலாக நடைப்பெற்றது.
மஞ்சுவிரட்டு போட்டியையொட்டி ஊர் அம்பலக்காரர்கள் தலைமையில் மந்தையம்மன் கோவில் அருகே கிராமத்தினர் கூடினர். அங்கு காளைகளுக்கு வேட்டிகள் மற்றும் துண்டுகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பின்னர், முக்கிய வீதிகள் வழியாக காளைகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு, பின்னர் மஞ்சுவிரட்டுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட தொழுவத்தை வந்தடைந்தனர். அங்கு வாடிவாசல் வழியாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு மஞ்சுவிரட்டு நடைப்பெற்றது.
மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் தழுவி விளையாடினர். பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற மஞ்சுவிரட்டு என்பதால் திருப்பத்தூர், விராமதி, தென்கரை, கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்து ஏராளமானோர் இந்தப் போட்டியைக் கண்டுகளித்தனர்.
இந்த மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.