தமிழ்நாட்டில் அனைத்து குடும்பங்களிலும் சிலிண்டர் இணைப்பு உள்ளது என்ற மத்திய அரசின் கூற்றை தமிழக அரசு மறுத்துள்ளது
நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகிக்க கூடுதல் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 2.27 கோடி குடும்பங்கள் அதாவது 100 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்கள் எல்பிஜி இணைப்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறி, தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் 30 லட்சம் வீடுகளுக்கு எல்பிஜி இணைப்பு இல்லை என்று மாநில அரசு கூறுகிறது.
அதேசமயம், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், தமிழ்நாட்டில் எல்பிஜி கவரேஜ் 102.9% ஆக உள்ளதாக தெரிவித்துள்ளது, தமிழ்நாட்டில் 2.2 கோடி குடும்பங்களில் 2.27 கோடி வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்புகள் (ஏழு லட்சம் சிலிண்டர்களுக்கு மேல்) உள்ளதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆர்டிஐ பதிலில் தெரிவித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2001 மற்றும் 2011க்கு இடைப்பட்ட பத்தாண்டு மக்கள்தொகை வளர்ச்சியின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. இந்த முறையின்படி, தமிழ்நாட்டின் எல்பிஜி கவரேஜ் 102.9% ஆக உள்ளது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
எல்பிஜி கவரேஜ், கிராமப்புற மின்மயமாக்கல் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
எல்பிஜி கவரேஜ், கிராமப்புற மின்மயமாக்கல் மற்றும் காலாவதியான ஒதுக்கீடு போன்ற காரணிகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் மண்ணெண்ணெய் ஒதுக்குகிறது. 2010-11 முதல் இந்தியா முழுவதும் மண்ணெண்ணெய் விநியோகம் முறைப்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு 2019-20 காலகட்டத்தில் மாதத்திற்கு சராசரியாக 12,700 கிலோ லிட்டர் ஒதுக்கீட்டிற்கு மாறாக மாதத்திற்கு சராசரியாக 2,700 கிலோலிட்டரே பெற்றது. இதன் விளைவாக, மாநிலத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் 17 முதல் 20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒன்று முதல் இரண்டு லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படுகிறது என்று அரசு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு, தமிழ்நாடு உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் கடந்த ஏப்ரல் மாதம் கடிதம் எழுதியும் மத்திய அரசு அதனை ஏற்கவில்லை.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: கொடைக்கானலுக்கு என்ன சம்பந்தம்?
குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கிராமப்புறம் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் பெரும் பகுதியினர் இன்னும் சமையலுக்கு மண்ணெண்ணையையே நம்பியுள்ளனர்,.” என்று தெரிவித்துள்ளார். “பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. மத்திய அரசிடம் இருந்து நாங்கள் பெறும் ஒதுக்கீடு எதுவாக இருந்தாலும், தேவைப்படும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.” என்று மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
எல்பிஜி இணைப்பு இல்லாத கார்டுதாரர்களுக்கும், ஒரு எல்பிஜி சிலிண்டர் இணைப்பு உள்ளவர்களுக்கும் நியாய விலைக் கடைகள் மூலம் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. மண்ணெண்ணெய்யின் அளவு, வசிக்கும் இடத்தைப் பொறுத்து மாதத்திற்கு மூன்று முதல் 15 லிட்டர் வரை மாறுபடும்.
தமிழ்நாட்டின் 2.27 எல்பிஜி இணைப்புகளில், பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 28 லட்சம் குடும்பங்களுக்கு IOCL மற்றும் HPCL ஆகியவை சிலிண்டர் விநியோகம் செய்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.
சென்னையில் ஒற்றை சிலிண்டர் குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை என்று தகவல்கள் வெளியகியுள்ளன. இதுகுறித்து சென்னைவாசி ஒருவர் கூறுகையில், “ரேஷன் கடைகளில் இருந்து எனது குடும்பத்துக்கு மாற்று எரிபொருளாக கடந்த 2018ஆம் ஆண்டு வரை மூன்று லிட்டர் மண்ணெண்ணெய் பெற்று வந்தேன், ஆனால் அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.