விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தென்காசி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனை ஆதரித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தென்காசி தனி தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவை ஏற்று ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய இங்கு வந்துள்ளேன். இப்பகுதியில் முக்கிய தலைவரான ஜான்பாண்டியன் வெற்றி பெற்றால், உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவார். தேசிய ஜனநாயக கூட்டணி பாரத நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது. இண்டியா கூட்டணி, அவர்களின் குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா சொல்லுவதை உலக நாடுகள் கேட்கவில்லை. ஆனால் மோடி பிரதமராக வந்த பின், பாரத தேசம் என்ன சொல்கிறது என்பதை உலகமே உற்றுநோக்கி கொண்டிருக்கிறது. இதுதான் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கும், காங்கிரசுக்கும் உள்ள வேறுபாடு.
காங்கிரஸ் ஆட்சியில் உலகப் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது உலக அளவில் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரும்போது, 2027ல் உலக அளவில் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடியின் சங்கல்பமான 2047ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக மாறுவதற்கும், உலகின் சூப்பர் பவராக மாறுவதற்கும் ஜான்பாண்டியன் வெற்றி அவசியமாகிறது.
கடந்த காலங்களில் பாரத நாட்டின் மீது அண்டை நாடுகள் தாக்குதல் நடத்தி வந்தன. இன்று இந்தியாவின் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிரி நாடுகள் அச்சப்பட்டு கொண்டிருக்கிறத. ஜான் பாண்டியனை வெற்றி பெற வைத்து மக்களவைக்கு நீங்கள் அனுப்பினால், நன்றி சொல்வதற்காக உங்களை பார்க்க மீண்டும் வருவேன், இவ்வாறு அவர் பேசினார்.