
Ungaludan Stalin Petitions Found in Vaigai River! தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு 45 நாளில் தீர்வு காணும் விதமாக உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள கீழடி , பூவந்தி, மடப்புரம், ஏனாதி, நெல் முடிக்கரை பகுதிகளில் கடந்த 21 22 ஆகிய தேதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வைகை ஆற்றில் மிதந்த உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள்
மொத்தம் 50 க்கும் மேற்பட்ட மனுக்கள் மிதப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் அப்பகுதி சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி ஆகியோர் ஆற்றில் மிதந்து சென்ற மனுக்களை சேகரித்து எடுத்துச் சென்றனர். வெற்று விளம்பரத்துக்காக மக்களிடம் மனு வாங்கி விட்டு, இப்படி ஆற்றில் மிதக்க விடுவது தான் திராவிட மாடல் அரசின் சாதனை என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
''உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் விடியா திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல, திருப்புவனம் வைகையாற்றில் மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளது. கடும் கண்டனத்திற்கு உரியது. மக்களின் வலிகளை , உணர்வுகளை, வேதனைகளை புரிந்து கொள்ள இயலாமல் , அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி , உங்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த இந்த விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்'' என்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து இருந்தார்.
ஆட்சியர் கொடுத்த விளக்கம்
இந்நிலையில், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் ஆற்றில் மிதந்த விவகாரம் தொடர்பாக சிவங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி புது விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது ''மனுக்கள் மிதந்த விவகாரம் தொடர்பாக சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அதில் முகாமில் பெறப்பட்ட மனுக்களில் பட்டா மாறுதல் தொடர்பான மனுக்கள், உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டிருந்தன. அந்த மனுக்களின் நகல்களும், மேலும் வட்டாட்சியர் அலுவலகம் வழியாக பெறப்பட்ட 7 மனுக்களின் நகல்களும் ஆற்றில் மிதந்துள்ளன. இவை எல்லாம் தீர்வு காணப்பட்ட மனுக்கள்'' என்று பொற்கொடி தெரிவித்தார்.
இது நம்பும்படியாக இல்லை
மாவட்ட ஆட்சியர் சொல்வது நம்பும்படியாக இல்லை என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். அப்படி தீர்வு காணப்பட்டாலும் பொதுமக்கள் அளித்த மனுக்களை ஆற்றில் வீசலாமா? என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.