சசிகலாவின் தலைமையில் அணிவகுப்போம் என அ.தி.மு.க.வினர் உறுதி மொழி…

First Published Dec 12, 2016, 12:29 PM IST
Highlights


திருவாரூர்,

முதல்வர் ஜெயலலிதாவிற்கு நடந்த மௌன அஞ்சலியில், சசிகலாவின் தலைமையில் அணிவகுப்போம் என அ.தி.மு.க.வினர் உறுதி மொழி ஏற்றனர்.

முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஒருவாரம் ஆன பிறகும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் மௌன ஊர்வலம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

திருவாரூரில் நேற்று மௌன ஊர்வலம் நடந்தது. திருவாரூர் தெற்கு வீதியில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவர் கோபால் எம்.பி., முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ், மாவட்ட நிர்வாகிகள் பொன்.வாசுகிராம், முகமதுஅஸரப், ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பா.சுப்பிரமணியன், நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சிங்காரவேலு, தமிழ்செல்வன், சங்கர், ஜீவானந்தம், நடராஜன், அன்பு, குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் அண்ணா சதுக்கம், நேதாஜி சாலை, கடைவீதி வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. ஊர்வலத்தில் திரளான அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

இந்த ஊர்வலத்தைத் தொடர்ந்து, ஜெயலலிதா மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர் ஆர்.காமராஜ், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

“அ.தி.மு.க. இந்தியாவிலேயே முதல் பெரும் இயக்கமாக வர வேண்டும் என மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். ஜெயலலிதாவின் நிழலாக இருந்து 36 ஆண்டுகள் அர்ப்பணிப்பு உணர்வோடு தியாக வாழ்க்கை வாழ்ந்த சசிகலா அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தலைமை ஏற்க வேண்டும்.

சாதாரண தொண்டர்கள், தாய்மார்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் காப்பாற்ற வேண்டும். கட்டுகோப்புடன் இயக்கத்தை வழி நடத்த அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று ஆர். காமராஜ் கூறினார்.

இதனை தொடர்ந்து சசிகலாவின் தலைமையில் அணிவகுப்போம் என அ.தி.மு.க.வினர் உறுதிமொழி ஏற்றனர்.

click me!