
நெல்லை,
நெல்லையப்பர் கோவிலில் ஏராளமான அடியார்கள் முன்னணியில், சாமிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
நெல்லை நகர நெல்லையப்பர் கோவிலில் திருகார்த்திகை ஒளி திருவிழாவையொட்டி இன்று சொக்கபனை விளக்கு ஏற்றும் திருவிழா நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலையில் சாமி அம்பாளுக்கு சிறப்பு அபிசேக அலங்கார தீபாராதனை நடந்தது.
இதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு நெல்லையப்பர் சன்னதியில் நந்தி முன்பு மேளதாளம் முழங்க பரணி விளக்கு ஏற்றப்பட்டது.
அப்போது அங்கு கூடியிருந்த அடியார்கள் ‘சிவனே போற்றி என்ற பக்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.
இதைத்தொடர்ந்து யாகம் வளர்த்து சிறப்பு ஓமம் நடந்தது. இரவு 7–30 மணிக்கு சிறப்பு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பரணி தீபத்திற்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான அடியார்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (திங்கட்கிழமை) மாலை சாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவிலில் இருந்து நெல்லை நகர சாமி சன்னதி முன்பு உள்ள சொக்கபனை முக்கிற்கு எழுந்தருளுகிறார்.
இதனுடன் நேற்று ஏற்றப்பட்ட பரணி தீபமும் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.
பின்னர் பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுத்து சென்று இரவு 7–30 மணிக்கு சொக்கபனை தீபம் ஏற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு சொக்கபனை தீபம் ஏற்றப்படும்.