உதயநிதி வாய்க்கொழுப்புற்று பேசுகிறார். விரைவில் அவருடைய பேச்சு தக்க பாடம் கற்பிக்கும் என என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சாடியுள்ளார்
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 36ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் மத்திய பேருந்து நிலையம் முன்பு எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் ஊர்வலமாக சென்று எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தினர். பின்னர், ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தென் மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது தமிழக அரசு எந்த நிவாரண பணியும் மேற்கொள்ளவில்லை. இந்திய ராணுவம் கடலோர காவல் படை மத்திய அரசு நிறுவனங்கள் உதவி செய்ய தொடங்கிய பிறகு அமைச்சர்கள் ஒவ்வொருவராக எட்டிப் பார்க்கிறார்கள். இயற்கை பேரிடர் காலத்தில் தமிழக மக்கள் நாதியற்று தவிக்கின்றனர். விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழக மக்களுக்கு விடிவு கிடைக்கும்.” என்றார்.
உதயநிதியின் வாய்க்கொழுப்புற்ற பேச்சு அவருக்கு தக்க பாடம் கற்றுக் கொடுக்கும் என சாடிய அவர், “மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய அவர், சென்னையிலும் சேலத்திலும் இருந்து கொண்டு ஏதோ மக்களுக்கு வெள்ளத்தில் நீந்தி சென்று உதவி செய்வதை போல பேசுகிறார். நேரடியாக சென்று மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். மத்திய அரசு நிதி இல்லை என்றாலும் மாநில அரசு நிதியை ஒதுக்கி நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும்.” என தெரிவித்தார். மேலும், மத்திய அரசிடம் அணுகி நிதியை பெற்று நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்தியா உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும்: குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்!
முன்னதாக, தமிழக மக்களை வஞ்சிக்கும் திமுக அரசியல் அகற்றி மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் என அக்கட்சியினர் உறுதிமொழி ஏற்றனர்.