நான் சரியா படிக்கல; அதான் துணை முதல்வராகி விட்டேன்! ஓப்பனாக பேசிய உதயநிதி! நெட்டிசன்கள் ரியாக்சன்!

Published : Jul 28, 2025, 10:25 PM IST
Udhayanidhi stalin

சுருக்கம்

நான் நன்றாக படிக்காததால் துணை முதல்வராகி விட்டேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுக்கு நெட்டிசன்களின் ரியாக்சன் என்ன? என்பது குறித்து பார்ப்போம்.

Udhayanidhi Says He Became Deputy CM Because He Did Not Study Well: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில் 22 செவிலியர்களுக்கு 2025ம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார். மேலும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டு தொடக்க விழா இலட்சினை (Logo) மற்றும் நூற்றாண்டு விழா நிகழ்வுகளின் காலண்டர் தொகுப்பினை வெளியிட்டார்.

செவிலியர்களுக்கு புகழாரம் சூட்டிய உதயநிதி

இந்த விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ''நோய்கள் பரவாமல் இருக்க, தடுப்பூசி மிக, மிக அவசியம். ஆனால், தடுப்பூசி போடச் சென்றால், டாக்டர்களையும் செவிலியர்களையும் துரத்திய காலம் ஒன்று இருந்தது. அப்படிப்பட்ட மக்களிடம் பக்குவமாகப் பேசி, அவர்களுக்கு புரிய வைத்து, தடுப்பூசிப் போட்டு பல நோய்களை பரவாமல் தடுத்தப் பெருமை இங்கே கூடியிருக்கிற செவிலியர் சமூகத்துக்கு தான் உண்டு.

பல நோய்கள் பரவி தமிழ்நாட்டை உலுக்கிய நிலையில் அதையெல்லாம் முன்களப் பணியாளர்களாக நின்று தடுத்தது செவிலியர் சமூகத்தை சேர்ந்த நீங்கள் தான். குறிப்பாக கொரோனா காலத்தில் நீங்கள் ஆற்றிய பணியை எந்த காலத்திலும் யாராலும், மறுக்க முடியாது, மறக்க முடியாது'' என்று புகழாரம் சூட்டினார்.

சரியா படிக்காததால் துணை முதல்வராகி விட்டேன்

முன்னதாக உதயநிதி தனது பேச்சின் தொடக்கத்தில், ''முதலில் உங்களுடைய கவுன்சிலின் தலைவர் மருத்துவர் ராஜமூர்த்தி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த கவுன்சிலைப் பொறுத்தவரைக்கும் உங்களுக்கு அவர் தலைவர். பல பேருக்கு தெரியும், சில பேருக்கு தெரியாது. எனக்கு அவர் சொந்த தாய்மாமா, என்னை தூக்கி வளர்த்தவர் அவர்.

இன்னும் சொல்லப் போனால் கோபாலபுரம் வீட்டில் கலைஞர் இல்லத்தில் நானும் அவரும் ரூம் மெட்ஸ். ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்றாகத்தான் படித்தோம். அவர் நன்றாகப் படித்து டாக்டர் ஆகிவிட்டார்.நான் சரியாகப் படிக்காமல் துணை முதலமைச்சர் ஆகிவிட்டேன். இந்த நிலைமையில் நான் இங்கே நிற்பதற்கும் மிக, மிக முக்கியமான காரணம் ராஜமூர்த்தி தான்'' என்று கூறியிருந்தார்.

நெட்டிசன்கள் ரியாக்சன்

உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவரது பேச்சுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ''நீங்கள் எங்கு சரியாக படிக்கவில்லை. நீங்கள் தான் டிகிரி முடித்துள்ளீர்களே. உங்கள் தகுதி மற்றும் திறமையால் இந்த உயரத்துக்கு வந்துள்ளீர்கள்'' என்று ஒரு சில நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி, ஸ்டாலினால் கிடைத்த பதவி

அதே வேளையில் வேறு சில நெட்டிசன்கள், ''நீங்கள் உங்கள் தாத்தா (கருணாநிதி), தந்தை (முதல்வர் மு.க.ஸ்டாலின்) ஆகியோரின் புகழ் வெளிச்சத்தால் அரசியலுக்குள் வந்து மிக எளிதாக துணை முதல்வராகி விட்டீர்கள். திமுகவில் அடிமட்ட தொண்டனாக இருந்தா இந்த உயரத்தை எட்டினீர்கள். வாரிசு அரசியலால் மின்னல் வேகத்தில் உயரிய பொறுப்பை எட்டிய நீங்கள் சரியாக படித்திருந்தால் என்ன? படிக்காவிட்டால் என்ன? அதான் மேலும் மேலும் பதவி தேடி வந்து விடுமே'' என்று கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை எத்திராஜ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!