
விருதுநகர்
முதல் மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்த தலைமைக் காவலருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், கள்ளிகுடியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (46). இவர், கடந்த 2010-ல் மதுரையில் உள்ள சிறப்பு காவலர் படையில் பணியாற்றியுள்ளார்.
அப்போது, அதே படையில் சமையலராக பணியாற்றிய பெரியகுளத்தைச் சேர்ந்த பாண்டிசெல்விக்கும் (40), மாரியப்பனுக்கும் தொடர்பு ஏற்பட்டு திருமணமானது.
இந்த நிலையில் மாரியப்பனின் குடும்பத்தினர் சாத்தூர் அருகே தாயில்பட்டியைச் சேர்ந்த கார்த்திகாயினிக்கும் (32), மாரியப்பனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மாரியப்பன் தற்போது காரியாபட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், சாத்தூர் நீதித்துறை நடுவர் மன்றம் 1-ல், மாரியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை எமாற்றி இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக கூறி கார்த்திகாயினி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நடுவர்மன்ற நீதிபதி சண்முகவேல்ராஜ், மாரியப்பனினுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.