தமிழக வெற்றி கழகம் சார்பில் ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது
மக்கள் இயக்கம் சார்பில் தொடர்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வந்த நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாகவும் படிப்படியாக மாற்றி வந்தார். அந்த வகையில், மக்கள் இயக்கத்தினரை அரசியலுக்கு தயார் செய்யும் வகையில், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவர்களை போட்டியிட வைத்து வெற்றியும் பெற்றார். அதன் தொடர்ச்சியாக, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பெரிதும் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், புதிய அரசியல் கட்சியை அவர் தொடங்கியுள்ளார்.
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என பெயரிட்டுள்ளார். கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகம் சார்பில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நடத்தப்படும் விவாதங்களில் தற்காலிகமாக கலந்து கொள்பவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வீர விக்னேஷ்வரன், லயோலா மணி, ராம்குமார், ஜெகதீஷ் ஆகியோரது பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழக வெற்றி கழக பொதுச்செயலாலர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் முழுமையாக உதவ வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் விஜய், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம்: அறிக்கை மூலம் விஜய் என்ன சொல்கிறார்?
அதேசமயம், 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்க்காக வழிவகுப்பது தான் நமது இலக்கு எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.