ஒரே இரவில் 30 உடல்களுக்கு கூராய்வு எப்படி? மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர்? சுப்ரீம் கோர்ட்டில் கேள்வி!

Published : Oct 10, 2025, 06:04 PM IST
ஒரே இரவில் 30 உடல்களுக்கு கூராய்வு எப்படி? மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர்? சுப்ரீம் கோர்ட்டில் கேள்வி!

சுருக்கம்

கரூர் கூட்ட நெரிசலில் பலியான 30 பேரின் உடல்களை ஒரே இரவில் உடற்கூராய்வு செய்தது எப்படி? இதற்கான மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர்? என உச்சநீதிமன்றத்தில் தவெக தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பேசுபொருளாக உள்ளது. கரூர் வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. மேலும் தவெக கட்சிக்கும் எதிராகவும் உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.

உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு விசாரணை

கரூர் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராகவும், சிபிஐ விசாரணை கேட்டும் தவெக சார்பிலும், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்துக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.

அடுக்கடுக்கான கேள்விகள்

கரூர் பிரசாரம் தொடர்பான நெறிமுறைகளுக்காக தாக்கல் செய்யபட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் எப்படி உத்தரவிட்டது? தேர்தல் பிரசார நெறிமுறைகளை வகுப்பது தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் மீது நீதிமன்றம் கருத்துகளை முன்வைத்தது எப்படி? என்று கேள்விகளை கேட்ட உச்சநீதிமன்றம் இந்த வழக்கை தனி நீதிபதி விசாரனைக்கு எடுத்ததும் தவறு என்றும் தெரிவித்தது.

ஒரே இரவில் உடற்கூராய்வு எப்படி?

கரூர் சம்பவம் நடந்த நாள் அன்று உயிரிழந்தவர்களின் உடல்கள் அன்றைய நாளே ஒரே இரவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இப்படி அவசரம் அவசரமாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன? என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில், கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்ட சகோதரியை இழந்த ஒருவரும் பிரேத பரிசோதனை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மருத்துவர்கள் எங்கிருந்து வந்தனர்?

அதாவது 'கரூர் சம்பவம் நடந்த உடன் ஒரே இரவில் 30 உடல்களை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு அனைத்து உடல்களும் எரிக்கப்பட்டுள்ளன. 30 உடல்களை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் உடனடியாக எங்கிருந்து வந்தனர்?' என சகோதரியை இழந்தவர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் ‘4 மணி நேரத்திற்குள் அனைவருக்கும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதா? அங்கு பிரத பரிசோதனை செய்வதற்கான எத்தனை மேஜைகள் இருந்தன’  என்று கேட்டனர்.

தமிழக அரசு கொடுத்த விளக்கம்

இதற்கு பதில் அளித்த தமிழக அரசு தரப்பு, ''அரசு விரைவாக செயல்பட்டதற்காக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று தான் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சேலம் மாநாட்டுக்கு வந்திருந்த மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்காக அழைக்கப்பட்டனர்'' என்றது. தொடர்ந்து நீதிபதிகள், ''மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று இரவிலும் உடற்கூராய்வு செய்யலாம். அதில் எந்த தவறும் இல்லை'' என்று தெரிவித்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி