
கடந்த சில ஆண்டுகளாகவே தன்னுடைய அரசியல் வருகை குறித்து சூசகமாக பேசி வந்த தளபதி விஜய், இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற தன்னுடைய அரசியல் கட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அது மட்டும் அல்லாமல் 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், தனது கட்சியின் சார்பாக முதல்வர் வேட்பாளராக களமிறங்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் அரசியலில் முழு நேரமாக ஈடுபட உள்ள நிலையில், தன்னுடைய திரை வாழ்க்கைக்கு முழுமையாக குட் பை சொல்ல உள்ளதாக தளபதி விஜய் அறிவித்தார்.
அவர் சொன்னபடியே இரு பட பணிகளை முடித்துவிட்டு முழுமையான அரசியல் பிரவேசம் மேற்கொள்கிறார். இதற்கு இடையில் கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி பல லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டை அவர் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார். இந்த முதல் மாநில மாநாட்டில் சுமார் 45 நிமிடங்கள் பேசிய தளபதி விஜயின் பேச்சுக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல குரல்கள் தொடர்ச்சியாக எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தன்னுடைய தொண்டர்களுக்காக கடிதம் ஒன்றை தளபதி விஜய் தற்பொழுது வெளியிட்டிருக்கிறார்.
த.வெ.க; மாநாட்டுக்கு வரும் வழியில் இறந்த தொண்டர்கள் - எதிர்ப்புக்கு பின் வந்த விஜயின் இரங்கல்!
"மாநாடு குறித்து உங்களுடன் பேசுவதற்காக நான் எழுதும் நான்காவது கடிதம் இது, வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் நான் எழுதும் ஒரு நன்றி கடிதம் இது" என்று கூறி தன்னுடைய கடிதத்தை தொடங்கி இருக்கிறார். "அரசியலை பொறுத்தவரை கடிதமுறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா நமக்குத் தந்த ஆயுதம். தமிழ் மக்கள் நம் அனைவருக்கும் அது சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில் தான் நாமும் அதை கையில் எடுத்தோம்" என்று கூறுகிறார்.
"மாநாடு நடத்த நமக்கு கிடைத்தது மிக குறுகிய கால இடைவெளி தான், ஆனால் அதிலும் திறன் பட செயல்பட்டார்கள் நமது கட்சி தொண்டர்கள். அடைமழை வேறு குறுக்கிட்டது, ஆனால் அதையும் சமாளித்து சூறாவளியாக சுழன்று நம் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை வெற்றி பெறச் செய்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள். குறிப்பாக மாநாட்டு பணிகள் நடக்க, அதற்கான இடத்தை தேர்வு செய்வதிலிருந்து, திடல் அமைக்கும் பணிகள் வரை மாநாடு முழுமையாக வெற்றி அடையும் வரை கழக நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட்ட பொதுச் செயலாளர் என். ஆனந்த் அவர்களுக்கு நன்றி."
"திடல் வடிவ பணிகளை பார்வையிட்ட பொருளாளர் வெங்கட்ராமனுக்கு நன்றி, எப்போதும் விவசாய பெருமக்களை வணங்கி போற்றும் இயக்கமான நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்கள் கரம் பற்றி நன்றி சொல்லவே எனக்கு விருப்பம். இருந்தும் இப்போது நெஞ்சம் நெகிழ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், வி சாலை, விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு நன்றி சொல்ல தோன்றுகிறது. ஆகவே அவர்களுக்கும் நன்றி".
"மேலும் கடிதம் வாயிலாக நான் வெளியிட்ட வேண்டுகோளை ஏற்று, தங்கள் வீட்டில் இருந்தே வெற்றிக் கழக கொள்கை திருவிழாவை கண்டு கொண்டாடிய தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள். நம்முடைய அரசியல் பயணத்தை நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள், இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மற்றவைகளை மறந்தும் கூட மனதில் ஏற்றிக்கொள்ளக்கூடாது" என்று கூறியுள்ளார்.
Vijay TVK Maanadu: மாநாட்டில் ரஜினியை கூட விட்டுவைக்காத விஜய்! தளபதி கொடுத்த உள்குத்து யார்;