கிளாம்பாக்கம் என்றாலே கிளர்ச்சிப்பாக்கம்! அடிப்படை விஷயம்கூட தெரியாதா ஆட்சியாளர்கள்! சொல்வது யார் தெரியுமா?

Published : Jun 08, 2025, 12:35 PM IST
kilambakkam

சுருக்கம்

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். 

சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல்

பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப எவ்வாறு இயக்குவது என்பது தொடர்பான அடிப்படை விஷயம் கூட ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா? என தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்னை மாநகரில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சென்னைக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. சென்னை மற்றும் புறநகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகையின் எண்ணிக்கை மற்றும் அடர்த்திக்கு ஏற்றவாறு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கின்றனவா? என்றால் இல்லை என்பதே பதில்.

அவசர கதியில் திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

இதற்கு மிகப் பெரிய உதாரணம், இந்த வாரம், ஜூன் 4ம் தேதி இரவு முதல் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் வெளியூருக்குச் செல்லும் பயணிகள். பேருந்துகள் இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளான கொடும் சம்பவம். சென்னைக்கு வெளியே வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் எந்த ஓர் அடிப்படையான போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தாமல் புதிய பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் செல்ல, ரயில் மற்றும் பேருந்துப் போக்குவரத்தைப் போதிய அளவில் உருவாக்காமலேயே புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால். திறந்தது முதலே பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கண்ணெதிரே காணும் சாட்சிகள்

கோயம்பேடு பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட போதும் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட போதும் போதிய வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. மக்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப திட்டமிட்டுச் செயல்படுத்துவதே சிறந்த ஆட்சி. ஆனால், தமிழ்நாட்டை இதுவரை ஆட்சி செய்தவர்கள் மக்களின் தேவைகளை அறிந்து ஆட்சி செய்யவில்லை என்பதற்கு இந்த இரு பேருந்து நிலையச் செயல்பாடுகளே கண்ணெதிரே காணும் சாட்சிகள்.

அரசுக்கு எதிராக முழக்கம்

இது ஒருபுறம் இருக்க, கடந்த புதன்கிழமை இரவு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லாததால், தென் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் கைக்குழந்தைகளோடு கடும் அவதிக்கு உள்ளாகியது மிகுந்த மன வேதனையைத் தருகிறது. பல மணி நேரம் காத்திருந்து. இங்கும் அங்குமாய் அலைந்து திரிந்த பயணிகள் பேருந்துச் சேவையே இல்லை என்பது தெரிந்ததும். கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். அந்த நள்ளிரவில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்களது குடும்பத்தினருடன் அரசுக்கு எதிராக முழக்கமிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா?

சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுமே பொதுமக்கள் சமாதானம் ஆகவில்லை. இதன் மூலம் அவர்களின் கோபம் எந்த அளவு இருந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கோவில் திருவிழா காரணமாகப் பேருந்துகள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று அரசு கூறும் காரணம். பொதுமக்கள் மீது பழியைச் சுமத்தி, தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைக்கப் பார்ப்பதேயன்றி வேறில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் என்றாலே மக்களின் கிளர்ச்சிப்பாக்கம் என்று விமர்சிக்கும் வகையில், பயணிகள் பேருந்துகள் வசதியின்றி கடும் அவதிக்கு உள்ளாவதே இன்னும் தொடர்கதையாகி வருகிறது. பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப எவ்வாறு இயக்குவது என்பது தொடர்பான அடிப்படை விஷயம் கூட ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா? ஆட்சியாளர்கள் மக்களைப் பற்றிச் சிறிதேனும் அக்கறை கொண்டிருந்தால் இவ்வாறு நடந்துகொள்வார்களா?

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் முறையான பேருந்து சேவைகள் செய்யப்படாதது கடும் கண்டனத்துக்கு உரியது. திருவிழாக் காலங்கள் மற்றும் விடுமுறை நாள்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களுக்கு அதிகப் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் ஒப்புதலுடன் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகம் முழுவதும் நாளை (08.01.2026) 8 மணி நேரம் மின்தடை.. வெளியான முக்கிய அறிவிப்பு
Tamil News Live today 07 January 2026: கல்யாணி என் தங்கச்சி... நாங்க ட்வின்ஸ்; முத்துவிடம் புது குண்டை தூக்கிபோட்ட ரோகிணி - சிறகடிக்க ஆசை அப்டேட்