டேய் கார் கீதா? இவங்களை இட்னு போய் ஊட்ல உடு..! கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை பாசமாய் திருப்பி அனுப்பிய புஸ்ஸி!

Published : Nov 23, 2025, 05:12 PM IST
Bussy Anand

சுருக்கம்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பாதுகாப்பு காரணங்களுக்காக கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை புஸ்ஸி ஆனந்த் தடுத்து நிறுத்தி, தனி அறையில் தங்க வைத்தார். இந்த மனிதாபிமான செயல் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தடையை மீறி கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுரை கூறி திருப்பி அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மீண்டும் தொடங்கிய மக்கள் சந்திப்பு

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் மாதம் முதல் பொதுமக்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்து வந்தார். இடையில் கரூரில் நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் அசம்பாவிதங்கள் காரணமாக, இந்தப் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சுமார் ஒரு மாத கால இடைவெளிக்குப் பிறகு, காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்று மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் சம்பவத்தை மனதில் வைத்து, இம்முறை மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு முன்னரே க்யூ.ஆர். கோடு (QR Code) வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில், முதியவர்கள் மற்றும் குழந்தைகளை அரங்கத்திற்குள் அழைத்து வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

புஸ்ஸி ஆனந்த் நேரடி ஆய்வு

நிகழ்ச்சி தொடங்கும் முன்பாக, தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) கல்லூரி வளாகத்திற்கு வரும் வாகனங்களை நேரில் ஆய்வு செய்தார். அப்போது, குழந்தைகளுடன் யாரேனும் வருகிறார்களா என்பதைக் கண்காணித்தார்.

அந்தச் சமயத்தில், விஜய்யைப் பார்ப்பதற்காக ஒரு பெண் தனது கைக்குழந்தையுடன் வந்திருந்தார். அவரைக் கண்ட புஸ்ஸி ஆனந்த், அவரைத் தடுத்து நிறுத்திப் பேசினார்.

"கோச்சிக்காதீங்கம்மா..."

அந்தப் பெண்ணிடம் மிகவும் கனிவாகப் பேசிய ஆனந்த், “குழந்தைய இட்டுனு வராதன்னு சொன்னேன்... சொல்லி மூணு மாசந்தான ஆகுது... கோச்சிக்காத...” என்று கூறினார். குழந்தையின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் எடுத்துரைத்தார்.

பின்னர், அந்தக் குழந்தையை உடன் வந்திருந்த பெண்ணின் மாமனாரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், நிகழ்ச்சி முடியும் வரை குழந்தையும் தாத்தாவும் தங்குவதற்குத் தனி அறை ஏற்பாடு செய்வதாகக் கூறி, அவர்களைத் தனது காரிலேயே அந்த அறைக்கு அனுப்பி வைத்தார்.

மூதாட்டிகளுக்கு விளக்கம்

அதேபோல், தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்று வருத்தத்துடன் முறையிட்ட சில மூதாட்டிகளிடமும் ஆனந்த் பேசினார். "வயசானவங்களை எல்லாம் விடமாட்டோம்ன்னு இல்ல.. கும்பலில் உங்களுக்குச் சிரமம் வரக்கூடாது என்பதற்காகத்தான் அப்படிச் சொல்கிறோம்" என்று அவர்களுக்கு விளக்கமளித்து சமாதானப்படுத்தினார்.

பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள் அங்கிருந்தவர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமித்ஷா, மோடி ஒன்னு கூடி வந்தாலும் காவி நுழைய முடியாது..! திமுகவுக்காக மீண்டும் குதித்த "ஊத்தி கொடுத்த".. கோவன்
இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்