டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடுவதிலும், முடிவு வெளியிடுவதிலும் குழப்பம்- சீறும் டிடிவி தினகரன்

By Ajmal Khan  |  First Published Dec 14, 2023, 2:45 PM IST

அரசுப்பணிக்காக முயற்சிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தில் அலட்சியம் காட்டாமல், டி.என்.பி.எஸ்.சி தலைவர், உறுப்பினர், செயலாளர் உட்பட அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். 


டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்

டி.என்.பி.எஸ்.சி யில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,  குரூப் 1, 2 மற்றும் 4 உள்ளிட்ட தேர்வுகள் மூலம் அரசுத்துறைகளின் அடிமட்ட பணியாளர்களில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் வரை தேர்வு செய்யும் தேர்வாணையத்திற்கு தலைவர் உட்பட பல்வேறு உறுப்பினர்களின் பதவியிடங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக நிரப்பப்படாமலே இருப்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் செயலாகும்.

Latest Videos

undefined

காத்திருக்கும் மாணவர்கள்

ஒவ்வொரு ஆண்டும் அரசுத்துறைகளில் ஓய்வு பெறுவோரின் காலிப்பணியிடங்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது ஒருபுறமிருக்க, மற்றொரு புறம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசுப் பணிக்காக காத்திருப்போரின் எண்ணிக்கையும் 65 லட்சத்தை தாண்டியிருப்பது உள்ளபடியே வேதனையளிக்கிறது. தேர்வாணைய செயலாளர் திடீர் மாற்றம், அட்டவணை அறிவித்தல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம், தேர்வு நடத்துவதில் குழப்பம் என பல்வேறு புகார்களில் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் சிக்கித் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், லட்சக்கணக்கான இளைஞர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நவம்பர் மாதம் வெளியாக வேண்டிய குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணை தற்போது வரை வெளியிடப்படாத சூழலில், மேலும் தாமதமாகுமோ என்ற அச்சம் தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தேர்வு அட்டவணை வெளியிடுக

மேலும், குரூப் 2 தேர்வுகள் நடைபெற்று பத்து மாதங்கள் கடந்த நிலையிலும் முடிவுகள் வெளியிடப்படாமல் இருப்பதும், அக்டோபர் மாதம் வெளியிட வேண்டிய 2024 ஆம் ஆண்டு தேர்வு அட்டவணை தற்போது வரை வெளியாகாமல் இருப்பதும் தேர்வர்களுக்கு தேர்வாணையத்தின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது.எனவே, அரசுப்பணிக்காக முயற்சிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தில் அலட்சியம் காட்டாமல்,

டி.என்.பி.எஸ்.சி தலைவர், உறுப்பினர், செயலாளர் உட்பட அனைத்து காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்புவதோடு, தேர்வு அட்டவணை தொடங்கி பணி நியமனம் வரையிலான அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் உரிய நேரத்தில் முடிக்கும் வகையில் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

இந்தி தேசிய மொழி அல்ல: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

click me!