Chennai Flood : வெள்ள நிவாரணத் தொகை 12,659 கோடி வேண்டும்..! மத்திய குழுவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை

Published : Dec 14, 2023, 02:15 PM IST
Chennai Flood : வெள்ள நிவாரணத் தொகை 12,659 கோடி வேண்டும்..! மத்திய குழுவிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை

சுருக்கம்

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிடவும், தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் மத்திய குழுவிடம் தமிழக அரசு சார்பாக கோரப்பட்டுள்ளது.  

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கடுமையான மழைப்பொழிவின் காரணமாக பெருநகர் சென்னை மாநகராட்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பிற்குள்ளானது. மேலும் வரலாறு காணாத கனமழையின் காரணமாக, சாலை, பாலம், நீர்நிலை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உட்கட்டமைப்புகளுக்கும் பெரிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கடிதத்தில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் தமிழ்நாட்டிற்கு உடனடியாக ரூ.5060 கோடி நிதியை விடுவிக்குமாறும் முதலமைச்சர் கோரியிருந்தார்.

இதனையடுத்து மத்திய குழுவினர் சென்னை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தனர். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற ஆய்வுக்கு பின் முதலமைச்சர் ஸ்டாலினை மத்திய குழு இன்று தலைமைசெயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியது. அப்போது, மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோரும் கோரிக்கை மனுவினை (Memorandum) முதலமைச்சர்  ஒன்றிய அரசின் ஆய்வுக் குழுவின் தலைவரிடம் வழங்கினார். இக்கோரிக்கை மனுவில், புயல் மழையால் சாலைகள், பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் போன்ற பொதுக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்திடவும், மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், 

பழுதடைந்த துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட மின்சார உட்கட்டமைப்புகளை சீர் செய்திடவும், பாதிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் தொட்டிகள், தெருவிளக்குகள், கிராம சாலைகள் ஆகியவற்றை சீர் செய்திடவும் இழப்பீடுகள் கோரப்பட்டுள்ளது.  மேலும், மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள், வலைகள் ஆகியவற்றிற்கு இழப்பீடுகள் வழங்கவும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுசெய்திடவும், சாலையோர வியாபாரிகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிடவும், தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் கோரப்பட்டுள்ளது.


இந்தக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியபோது,  சென்னையில் கடந்த இரண்டு நாட்கள் நீங்கள் மேற்கொண்ட ஆய்வு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.  இந்த வெள்ளச் சேதத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு தேவையான எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது. அதேபோல் புயல், மழையின் தாக்கத்திற்கு பிறகு. மீட்பு நிவாரண நடவடிக்கைகளும் முழுவீச்சில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. வரலாறு காணாத இந்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட மிகப் பெரிய சேதங்களை சரிசெய்து மீண்டும் உருவாக்கிடவும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அதனை மீண்டும் உருவாக்கி வழங்கிடவும் தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரங்கள் மட்டும் போதுமானது அல்ல ஒன்றிய அரசின் பங்களிப்பும் இதற்கு பெருமளவு தேவைப்படுகிறது. 

எனவே மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களை மீட்க தேவையான உதவிகளை வழங்கவும் பல்வேறு வகையான சமூக உட்கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்யவும் ஒன்றிய அரசிற்கு நீங்கள் உரிய பரிந்துரை செய்து தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரணத் தொகையை பெற்றுத்தர வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 16 December 2025: நாளை தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
பள்ளிகளுக்கு கொத்தாக 9 நாட்கள் விடுமுறை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டம்!