ஆ.ராசா இனியாவது தனது தகுதியை அறிந்து பேசனும்.! இல்லையெனில் அதற்கான பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்- டிடிவி

By Ajmal Khan  |  First Published Jan 31, 2024, 2:08 PM IST

எம்.ஜி.ஆர் அவர்களையும், ஜெயலலிதாபற்றியும் விமர்சனம் செய்ய விஞ்ஞான ஊழல் செய்வதில் வல்லவர்கள் என பெயர் பெற்ற திமுகவினருக்கு என்ன தகுதியிருக்கிறது? என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். 


ஆ.ராசாவிற்கு கண்டனம்

எம்ஜிஆரை விமர்சித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவிற்கு அதிமுகவினர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனதில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சித் தலைவர் அவர்களை பற்றிய திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கண்டனத்திற்குரியது. திமுகவை தீயசக்தி எனக்கூறி தான் உயிரோடு இருக்கும் வரை ஆட்சிப் பொறுப்பிற்கு வரவிடாமல் அடியோடு சாய்த்த புரட்சித் தலைவர் அவர்கள் மறைந்த பின்பும் திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் என்பதையே ஆ.ராசா அவர்களின் தரம் தாழ்ந்த பேச்சு வெளிப்படுத்துகிறது.

Tap to resize

Latest Videos

துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி, துரோகத்தாலேயே அழிவார்.. இறங்கி அடிக்கும் டிடிவி.தினகரன்..!

திமுகவினருக்கு என்ன தகுதியிருக்கிறது?

தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்து பொதுவாழ்வில் நேர்மையின் அடையாளமாக திகழ்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றியும், இதய தெய்வம் அம்மா அவர்களை பற்றியும் விமர்சனம் செய்ய விஞ்ஞான ஊழல் செய்வதில் வல்லவர்கள் என பெயர் பெற்ற திமுகவினருக்கு என்ன தகுதியிருக்கிறது? ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இன்று சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அரை நூற்றாண்டுக்கும் முன்பாகவே அரசியலில் கடைக்கோடி தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வரமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் என்பதை திமுகவினர் மறந்துவிடக்கூடாது.

தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்

புரட்சித் தலைவர் அவர்களின் நேர்மையான வாழ்க்கைக்கு, வாழ்நாள் முழுவதும் அவருக்காக கூடிய கூட்டமே சாட்சியாக இருக்கும் போது, அரசியல் காரணத்திற்காக இழிவுப்படுத்தும் நோக்கிலான பேச்சுக்கள், புரட்சித் தலைவர் அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் எந்தவகையிலும் களங்கத்தை ஏற்படுத்தாது என்பதை திமுகவினர் உணர வேண்டும். மறைந்த தலைவர்கள் மீது தொடர்ந்து சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வைத்து வரும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா அவர்கள் இனியாவது தனது தகுதியை அறிந்து பேச வேண்டும். இல்லையெனில் அதற்கான பாடத்தை வரும் தேர்தல்களில் மக்கள் புகட்டுவார்கள் என்பதை எச்சரிக்கையாக விடுக்கிறேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

மறைந்த தலைவர்களை அவதூறாக பேசி ஆதாயம் தேடிக்கொள்ள நினைப்பது தான் சுயநலவாதி ஆ.ராசாவின் வாடிக்கை- இபிஎஸ்

click me!