
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறியது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூட்டணி கட்சி தலைவர்களை மதிக்கவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்த நயினார், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் பேசத் தயார் என்று கூறியிருந்தார்.
நயினாரின் நடத்தை சரியில்லை
இந்நிலையில், நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற நயினர் நாகேந்திரன் காரணம் என்று டிடிவி தினகரன் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ''நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக வழிநடத்தவில்லை. அவரது மனநிலை, நடவடிக்கை காரணமாகத் தான் நாங்கள் கூட்டணியை விட்டு வெளியேறினோம்.
எடப்பாடியை தூக்கிப் பிடிக்கும் நயினார்
எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் என்று அமித்ஷா எங்கும் சொல்லவில்லை. ஆனால் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியை தூக்கிப் பிடிக்கிறார். ஓபிஎஸ், டிடிவி உடன் பேசத் தயார் என எந்தவித மனமுமின்றி சும்மா பேச்சுக்காக நயினார் சொல்கிறார். ஓபிஎஸ்க்கு நயினார் செய்த செயலை நான் கேட்டால் நீங்கள் ஏன் அதைப் பற்றி கேட்கிறீர்கள் என்கிறார். ஓபிஎஸ்காக நான் கேட்காவிட்டால் யார் கேட்பார்? அதிமுக ஒன்றே போதும்; நாங்கள் தேவையில்லை என நயினார் நாகேந்திரன் நினைக்கிறார். ஆணவம், அகம்பாவத்தில் பேசுகிறார். எங்களை திட்டமிட்டு கூட்டணியை விட்டு வெளியேற்றினார்'' என்றார்.
எடப்பாடியை ஏற்றுக் கொள்ள முடியாது
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய டிடிவி தினகரன், ''தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை நாங்கள் ஒருபோதும் ஏற்கவில்லை. அவர் செய்த துரோகத்தினால் தான் அமமுக என்ற கட்சியையே ஆரம்பித்தோம். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பது தற்கொலைக்கு சமமானது. எடப்பாடி பழனிசாமி என்னிடம் பேசவே தயங்குவார். அவர் மற்றும் அவருடன் இருக்கும் ஒரு சிலரைத் தவிர அதிமுகவில் மற்றவர்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை'' என்று தெரிவித்தார்.
கூட்டணி குறித்து பேசிய டிடிவி தினகரன்
மேலும் கூட்டணி குறித்து பேசிய டிடிவி தினகரன், ''நீங்கள் நினைக்காஅத ஒரு கூட்டணி அமையும். பொறுத்திருந்து பாருங்கள். நாங்கள் அமைக்கும் கூட்டனி தான் தேர்தலில் வெற்றி பெறும். அதிமுக தொண்டர்களின் மனநிலையை தான் செங்கோட்டையன் பிரதிபலித்துள்ளார். அவரை சந்தித்து ஆதரவு கொடுப்பேன்'' என்று கூறினார். இதேபோல் விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தால் என்ன தவறு? என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.