
மனித நேயத்தை மனிதர்கள் கூறுபோட்டு விற்கும் சமகாலத்தில், மனிதம் புனிதம் என்று பொன்மொழி பேசுகிறார் திருப்பூரைச் சேர்ந்த முடி திருத்தும் இந்த கலைஞன்.
திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் முடிதிருத்தகம் நடத்தி வருகிறார் தெய்வராஜ். நாம் பார்த்தும் பார்க்காமலும் விலகிச் செல்லும் மனநலம் பாதிக கப்பட்டவர்களை தேடிச் சென்று அவர்களுக்கு முடி வெட்டி, சுத்தப்படுத்தி அழகு பார்த்து வருகிறார்.
இவரின் இச்சேவை குறித்து அறிந்த NEWSFAST இணைய செய்தித்தளம், அவரை சந்திப்பதற்காக திருப்பூர் மாவட்டத்திற்கு பயணம் செய்தது.
அனுப்பர்பாளையம் பேருந்துநிலையம் அருகே உள்ளது தெய்வராஜின் முடிதிருத்தகம்.சென்னையில் இருந்து வருகிறோம். உங்களைப் பற்றி பேட்டி எடுக்க வேண்டும் என்று கூறி விட்டு இருக்கையில் அமர்ந்தோம்.
வாக்களித்தபடியே 10 ஆவது நிமிடத்தில் ஆஜரானார் தெய்வராஜ்.இனி அவரது மொழி நடையிலேயே பேட்டியைக் கேட்கலாம்.
"சின்ன வயசுல இருந்தே மனநிலை பாதிக்கப்பட்டவங்க மேல எனக்கு இனம் புரியாத பற்று இருந்தது. இவங்களுக்கு எதாவது செய்யனும்னு அப்பவே மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு.அதனால் நானும் எனது நண்பர் சீனிவாசனும் சேர்ந்து கடந்த 2002 ஆம் ஆண்டு திருப்பூரில் இந்த சேவையை தொடங்கினோம்.
வீடிழந்து, நாடிழந்து உறவிழந்து, நிற்கதியாய் தன்னைச் சுத்தி என்ன நடக்குதுனே தெரியாமல் வீதியில் சுற்றித் திரியும் இவர்களை பார்த்தால் கண்களில் தானாகவே கண்ணீர் வரும்...
இப்படி பட்டவங்கள வீதி வீதியா தேடி அலைந்து அவங்களுக்கு முடிவெட்டி, குளிப்பாட்டி, புது டிரெஸ் போட்டு அழகு பார்ப்போம்..
ஆணாக இருந்தா நானும் பெண்ணாக இருந்தா என் மனைவியும் முடிவெட்டுவோம் ஆரம்பத்துல ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. சிலர் கடிச்சு வைப்பாங்க. கெட்ட வார்த்த பேசுவாங்க..ஆனா இத்தன கஷ்டத்தையும் மீறி இறுதியாக அவங்க முகத்த கண்ணாடில அவங்களுக்கு காட்டும் போது அப்போ அவங்க முகத்துல வரும் பாருங்க ஒரு சிரிப்பு அதுக்கு இணையானது எதுவும் இல்லைங்க.
கணவன் மனைவியா இந்த சேவையை ஆரம்பிச்சோம்.இப்போ 50 பேர் சேவைக்கு உறுதுணையாக இருக்காங்க...
இந்த உலகத்துல நம்ம வாழ்றது கொஞ்சம் காலம் தான்...இருக்கிற வரைக்கும் நாலு பேருக்கு நல்லது பன்னிட்டு போலாமே