
பழைய 500 மற்றும் 1000 நோட்டுகளை மாற்றியது தொடர்பாக கைது செய்யப்பட்டு 3 நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்த சேகர் ரெட்டி, அமலாக்கப்பிரிவினரால் இன்று அதிகாலை மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அறிவித்தார். கறுப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மோடி அறிவித்தார்.
இதனையடுத்து நாடு முழுவதும் வருமான வரித்துறையினரும், அமலாக்கத் துறையினரும் அதிரடியாக சோதனைகள் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான கோடி கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் சென்னை தியாகராயநகரை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது ஏராளமான புதிய 2000 ரூபாய் நோட்டுக்களும்,பழைய ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி மனுத்தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து கடந்த 17 ஆம் தேதி
நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று காலை சேகர் ரெட்டியை சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் விசாரிப்பதற்காக அமலாக்கப்பிரிவு போலீசார் அழைத்துச் சென்றனர். 10 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த விசாரணைக்குப் பின் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
ஜாமீனில் வெளிவந்த மூன்றாவது நாளே சேகர் ரெட்டி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.