
பத்திரப்பதிவுக்கான தடையை வரும் 28-ஆம் தேதிக்குள் நீக்க வேண்டும் என்று மனை வணிகர்கள், தமிழக அரசுக்கு கெடு வைத்துள்ளனர். அப்படி நீக்காவிடில் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.
இராமநாதபுரம் அரண்மனை முன்பாக மனை வணிகர்கள் சங்கக் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு மனை வணிகர்கள் சங்கத் தலைவர் ஜெயபாண்டியன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டச் செயலாளர் அசன்அலியார் முன்னிலை வகித்தார். செய்தித் தொடர்பாளர் செந்தில் வரவேற்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் வி.கே.கண்ணன் பேசியது:
“தமிழகம் முழுவதும் கடந்த ஆறு மாதங்களாக பத்திரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு அவதிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். சொத்துக்களை விற்பனை செய்து பணம் பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக அரசுக்கும் தினமும் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பத்திரப்பதிவுக்கான தடையை நீக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுக்க வேண்டும்.
இம்மாதம் 28-ஆம் தேதிக்குள் தடையை நீக்காவிடில் வர இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம். விரைவில் சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும் நடத்துவோம் என்று பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளர் செல்வம், துணைச் செயலாளர் அன்புச் செல்வன், இணைச் செயலாளர் அபுதாஹிர், இராமநாதபுரம் வர்த்தக சங்கத் தலைவர் பா.ஜெகதீசன், தூத்துக்குடி மனை வணிகர் சங்க மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, அதிமுக பிரமுகர் ஆர்.ஜி.ரெத்தினம், திமுக பிரமுகர் இன்பா ரகு, அழகர், பொன்பாலா, எம்.எஸ்.பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.