
இராமநாதபுரத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மணல் சரிந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மூன்று மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
திருப்புல்லாணி அருகே சண்முகவேல்பட்டினம் கிராமத்தில் குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கிணறு தோண்டும் பணி நடைப்பெற்று வருகிறது.
இதில், தினைக்குளம் முத்து, மொத்தி வலசை முருகேசன், வேதகாரன் வலசையைச் சேர்ந்த வேலுச்சாமி, மொங்கான் வலசை கிராமத்தைச் சேர்ந்த சித்திரவேலு மகன் செல்வராஜ் (45) ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
கிணறு தோண்டிக் கொண்டிருந்தபோது, நேற்று திடீரென மணல் சரிந்து விழுந்தது. இதில் செல்வராஜ் மணலில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூன்று பேரும் உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்து இராமநாதபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஜெ.சி.பி. இயந்திரம் மூலம் சரிந்த மணலை சரி செய்தனர். பின்னர், செல்வராஜின் உடலை மீட்டனர்.
சம்பவ இடத்துக்கு இராமநாதபுரம் கோட்டாட்சியர் ரா.ராம்பிரதீபன், கீழக்கரை வட்டாட்சியர் இளங்கோவன், திருப்புல்லாணி வருவாய் ஆய்வாளர் முனியம்மாள் உள்ளிட்டோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
உயிரிழந்த செல்வராஜூக்கு சுந்தரி என்ற மனைவியும், சுவேதா (14) என்ற மகளும், சபரிதாஸ் (8) என்ற மகனும் இருக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக திருப்புல்லாணி காவல் ஆய்வாளர் சந்தானபோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்.