
விருதுநகர்
ரேசன் பொருட்கள் விநியோகத்தில் பிரச்சனை உள்ளது உண்மைதான் என்பதை தமிழக அமைச்சர்கள் ஒத்துக் கொண்டனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும், ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவியுமான வாசுகி விருதுநகரில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அந்தப் பேட்டியில், “தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் கிராமப் புறங்களில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் முறையாக வேலை வழங்கப்படுவதில்லை. வேலை செய்த நாள்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை.
இதனால் கிராமப்புற பெண்கள் வட்டிக்கு கடன் வாங்கி அதனை திரும்பச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
வறட்சிக் காலத்தில் 150 நாள் வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இருந்த போதிலும் முறையாக வேலை வழங்கப்படுவதில்லை. இதனால் கிராமங்களில் வேலையின்றி பெண்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
பேரூராட்சி பகுதிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்பட வேண்டும் என விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீர் ரூ.10 கொடுத்து வாங்க வேண்டியது உள்ளது. மாதம் தோறும் குடிநீருக்கு மட்டும் ரூ.600 செலவு செய்ய ஏழை மக்களால் இயலாது.
தாமிரபரணியில் இருந்து தான் விருதுநகர் மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அங்குள்ள உபரி நீரை தனியார் நிறுவனங்கள் உறிஞ்சி எடுத்துக் கொள்ள மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி வழங்கியுள்ளது.
இதனை எதிர்த்து மேல் முறையீடுச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கும்.
விருதுநகர் மாவட்டத்தில் ரேசன் கடைகளில் ஆய்வு செய்தபோது, அரிசி 80 சதவீதம், கோதுமை 70 சதவீதம், மண்ணெண்ணெய் 50 சதவீதம், சீனி 80 சதவீதம் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களாக துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்படவில்லை. மேலும் ஆதார் எண் இணைக்கப்படாத ரேசன் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
ரேசன் பொருட்கள் விநியோகத்தில் பிரச்சனை உள்ளது என்பதை தற்போதுதான் தமிழக அமைச்சர்கள் ஒத்துக் கொண்டுள்ளனர்.
வறட்சி நிவாரணத் தொகை அனைத்து விவசாயிகளின் வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படவில்லை. ரூ.35 ஆயிரம் கோடி வறட்சி நிவாரணம் தேவை என தமிழக அரசு கேட்டுள்ள நிலையில் மத்தியக்குழு ரூ.2 ஆயிரத்து 900 கோடி மட்டுமே நிவாரண நிதி வழங்க பரிந்துரைத்துள்ளது.
வார்தா புயல் நிவாரண நிதியும் வரவில்லை. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம், குடிநீர் மற்றும் ரேசன் பொருட்கள் விநியோகம் போன்றவற்றில் மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.
அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் இரு தரப்பினரும் நீதிமன்றத்துக்கு வெளியே சமரச பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. ஆவணங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு கூற வேண்டும்.
திராவிட கட்சிகளுக்கு மாற்று அரசியல் தேவை என்பதில் தோல்வி ஏற்பட்டு விட்டது என கூற முடியாது. தொடர்ந்து இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று அவர் கூறினார்.